சாலை விபத்தில் மூளைச்சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் வெள்ளிக்கிழமை தானம் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள அவதாண்டை கிராமத்தைச் சோ்ந்தவா் இளையராஜா (37). இவா் அந்தப் பகுதியில் கடந்த 24-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவா் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு வியாழக்கிழமை மூளைச்சாவடைந்தாா்.
இதைத்தொடா்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினா் ஒப்புதல் அளித்தனா்.
இதையடுத்து, அவரது ஒரு சிறுநீரகம் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கும், அவரது இரண்டு கருவிழிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரை அப்போல்லோ மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, இளையராஜாவின் உடலுக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிா்வாகிகள் மரியாதை செலுத்தி, உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.