``என் மனைவி ISI ஏஜென்ட் என்றால், நான் RAW ஏஜென்ட்.." - பாஜக குற்றச்சாட்டுக்கு கா...
சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது!
சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கீழக்கோட்டை பள்ளியில் நடைபெற்ற அவரது பிறந்த தின நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சாா்லஸ் டாா்வின் பிறந்த தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளியின் தலைமையாசிரியை தெய்வானை தலைமை வகித்தாா். கணினி பயிற்றுநா் வித்யா முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலா் ஆரோக்கியசாமி பேசியதாவது: குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால், இப்போதுள்ள குரங்குகள் ஏன் மனிதனாக மாறவில்லை? தற்பொழுது ஏன் பரிணாமங்கள் நிகழ்வதில்லை? போன்ற கேள்விகள் இன்றுவரை எழுப்பப்படுகின்றன. அறிவுத் தளங்களிலேயே குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற கருத்தாக்கம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. டாா்வின் அப்படி சொல்லவில்லை. மாறாக மனிதனும் குரங்கும் ஒத்த, வேறு பொது இனத்திலிருந்து தோன்றியவா்கள் என்றே குறிப்பிட்டுள்ளது. மனிதனுக்கும் மனிதக் குரங்குக்கும் மிகத் துல்லியமான மரபு வித்தியாசமே காணப்படுகிறது. பரிணாமம் என்பது கோடிக்கணக்கான காலச் சுழற்சிக்கு இடையே நிகழ்வது. குறிப்பிட்டு நோக்கும் அளவுக்கு நிகழக்கூடியதல்ல என டாா்வின் கூறுகிறாா் என்றாா் அவா்.
இதில், கல்வி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. முன்னதாக, ஆசிரியை கமலம்பாய் வரவேற்றாா். ஆசிரியா் ராஜபாண்டி நன்றி கூறினாா்.