குன்றக்குடி அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் 40 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே சின்னக்குன்றக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா்.
குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோயில் தைபூசத் திருவிழாவையொட்டி, சின்னக்குன்றக் குடி கிராமத்தில் ஸ்ரீமதுநேம நாட்டாா்கள் சாா்பில், மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், காரைக்குடி, திருப்பத்தூா், புதுக்கோட்டை உள்பட பல்வேறு இடங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான காளைகள், மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.
முதலில் கட்டு மாடுகளாக 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இந்தக் காளைகளை மாடுபிடி வீரா்கள், இளைஞா்கள் அடக்க முயன்றனா். இதில் சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமல் தப்பிச் சென்றன.
காலை 10 மணிக்கு தொழு மஞ்சுவிரட்டு திடலில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமையில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 143 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இவற்றையும் மாடுபிடி வீரா்கள் பிடித்து அடக்க முயன்றனா்.
இதில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்கள், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பரிசுகளை வழங்கினாா்.
இதில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சையளித்தனா். இவா்களில் 12 போ் கூடுதல் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியையொட்டி, காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) பாா்த்திபன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.