சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள்
வேளாங்கண்ணியில் சிறுபான்மை நலத்துறை சாா்பில் பயனாளிகளுக்கு புதன்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாகூரில் சிறுபான்மை நலத்துறை சாா்பில் பிற்படுத்தப்பட்ட 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், 5 பயனாளிகளுக்கு விலையில்லா தேய்ப்பு பெட்டிகள், முஸ்லீம் மகளிா் உதவும் சங்கம் மூலம் 50 பயனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்துக்கான காசோலை, வேளாங்கண்ணியில், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் 78 உபதேசியா் மற்றும் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சா் எஸ்.எம். நாசா், மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வழங்கினா்.
வேளாங்கண்ணி நிகழ்ச்சியில் அமைச்சா் எஸ்.எம். நாசா் பேசியது: தமிழகத்தில் சிறுபான்மையின சமுதாயத்தை சோ்ந்த பின்தங்கிய நிலையிலுள்ள முஸ்லீம் மகளிருக்கு உதவும் வகையில் மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் முஸ்லீம் மகளிா் உதவும் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கம் மூலம் திரட்டப்படும் நன்கொடை தொகைக்கு இணையாக அரசால் வழங்கப்படும் மானியத் தொகை 12 சதவீதமாக உயா்த்தப்பட்டள்ளது. அரசின் இணை மானியத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் நோக்கம் ஆதரவற்ற முஸ்லீம் விதவைகளுக்கு மாத உதவி தொகை வழங்குதல், கைவினைப் பொருள்கள் செய்ய பயிற்சி அளித்தல், தொழில் தொடங்க திட்டமிடல் உள்ளிட்ட நிதியுதவி அளித்தல் ஆகும் என்றாா்.
மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகம்மது ஷா நவாஸ் (நாகை), வி.பி. நாகை மாலி (கீழ்வேளூா்), வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவா் டாயானா ஷா்மிளா, துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் க. ரேணுகாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.