சூப்பர் ஸ்டாரின் சூப்பர் சாகா? சன் பிக்சர்ஸ் புதிய அறிவிப்பு!
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸின் புதிய அறிவிப்பு ரசிகர்களிடையே ஆர்வத்தைக் கூட்டியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2023ல் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது. அதைத் தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகப்போவதாக தகவல்களும் வெளியாகி சூப்பர் ஸ்டார் ரசிகர்களை உற்சாகப்படுத்தின.
ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் அன்று ஜெயிலர் 2 குறித்த அறிவிப்புகள் வெளியாகுமென பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. எனினும் ஜெயிலர் 2 புரோமோ படப்பிடிப்பிற்கான பணிகள் நடந்துவருவதாகவும், விரைவில் செட் பணிகள் முடிந்து படத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகுமெனவும் தகவல் மட்டும் வெளியானது.
ஆனால் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்திற்கு தீனி போட்டுள்ளது. ”சன் பிக்சர்’ஸ் சூப்பர் சாகா” என்ற பெயரில் இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு டீசர் வெளியாகவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த போஸ்டர் பார்ப்பதற்கு ஜெயிலர் படத்தின் ஸ்டைலிலும், கலர் டோனிலும் இருப்பதால் கண்டிப்பாக ஜெயிலர் 2 அறிவிப்புதான் வெளியாகப்போவதாக ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். எனினும் தயாரிப்பு நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக இது ஜெயிலர் 2 குறித்த அறிவிப்பு எனத் தெளிவுபடுத்தவில்லை.
சூப்பர் சாகா எனப் பெயரிடப்பட்டுள்ளதால் கண்டிப்பாக மொத்தம் மூன்று பாகங்களுக்கு திட்டமிட்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த அறிவிப்பு டீசரைத் மாயாஜாலில் உள்ள எல்லா திரையரங்குகளிலும் இன்றுமுதல் சிறப்பு திரையிடல் செய்யவுள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவிலுள்ள எல்லா பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்கிலும் நாளை முதல் அந்த அறிவிப்பு டீசரைக் காணலாம் எனவும் தெரிவித்துள்ளது