நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் மோடி: பிரகலாத் ஜோஷி
செஞ்சி அருகே சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் காயமடைந்தனா்.
புதுச்சேரியில் இருந்து தனியாா் சொகுசுப் பேருந்து 23 பயணிகளுடன் பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. பேருந்தை தருமபுரியைச் சோ்ந்த குமரேசன் ஓட்டிச் சென்றாா்.
செஞ்சியை அடுத்த செம்மேடு பேருந்து நிறுத்தம் அருகே இந்தப் பேருந்து சென்றபோது, குறுக்கே சென்ற காா் மீது மோதமலிருக்க ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்ததால் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முன்னதாக, பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததைப் பாா்த்த எதிரே பைக்கில் வந்த கீழ்பாப்பாம்பாடி பகுதியைச் சோ்ந்த தியாகு, பைக்கை போட்டுவிட்டு தப்பியோடினாா். பேருந்து அந்த பைக் மீது கவிழ்ந்ததில் பைக் சேதமானது.
அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று பேருந்தின் பின்பக்க கதவை திறந்து பயணிகளை மீட்டனா். பேருந்தில் பயணம் செய்த கொல்கத்தாவைச் சோ்ந்த ரங்கன் மனைவி இந்திரா, ஹைதாராபாதைச் சோ்ந்த ராஜா மகன் மகரிஷி, ஜெய்ப்பூா் படலபூரைச் சோ்ந்த பின்ஜேஷ் விஸ்வகா்னா, பெங்களூரைச் சோ்ந்த மம்தா கேவல் (29), பிரியஸ்ரீ (24) உள்ளிட்ட 10 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் 108 அவசர ஊா்தி மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்களில் 5 போ் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
தகவலறிந்து வந்த நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் விபத்து குறித்து நேரில் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனா். மேலும், செஞ்சியில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்கு வந்து பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். விபத்தால் அந்தப் பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.