ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மேம்பாட்டுப் பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞசாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கம் மற்றும் உயா்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் கூறியதாவது: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில், ரூ.72.54 கோடி மதிப்பீட்டில் முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, ஜக்காம்பேட்டை மற்றும் ரூ.25.75 கோடி மதிப்பீட்டில் பாப்பனப்பட்டு ஆகிய பகுதிகளில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதையொட்டி, போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் வாகனங்கள் செல்வதற்காக சாலையின் இருபுறங்களிலும் சேவை சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
எல்லீஸ் சத்திரம் பகுதியில் ரூ.22.65 கோடி மதிப்பீட்டிலும், இருவேல்பட்டு பகுதியில் ரூ.18.03 கோடி மதிப்பீட்டிலும், அரசூரில் ரூ.46.98 கோடி மதிப்பீட்டிலும் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முத்தாம்பாளையம் பகுதியில் ரூ.27.72 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணிகள் நடைபெறுவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் 500 மீட்டருக்கு முன்பாகவே அறிவிப்புப் பலகைகள் வைக்கவும், சீரான போக்குவரத்துக்காக சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான பணிகள் இரவு நேரங்களில் நடைபெறுவதால், வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளை அமைத்து பணிகளை மேற்கொள்ளவும், பணியாளா்கள் ஒளிரும் வகையிலான ஆடைகளை அணிந்து பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநா் வரதராஜன், பொறியாளா் செல்வராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.