செல்லமே அல்ல, தங்க மீன்கள்: பெயர் மாற்றப்பட்ட ரேஷ்மாவின் சீரியல்!
நடிகை ரேஷ்மா முரளிதரன் நடிக்கவுள்ள புதிய தொடரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. முதலில் செல்லமே எனப் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தங்க மீன்கள் என மாற்றப்பட்டுள்ளது.
நடிகை ராதிகா நடிப்பில் செல்லமே என்ற பெயரில் ஏற்கெனவே தொடர் ஒளிபரப்பானதால், இந்தத் தொடரின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இத்தொடரில் நடிகை ரேஷ்மா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிஷ்ணு மேனன் நாயகனாக நடிக்கிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அடுத்தடுத்த தொடர்களில் நடித்துவந்த ரேஷ்மா, முதல்முறையாக இத்தொடரின் மூலம் சன் தொலைக்காட்சியில் நடிக்கிறார்.
இவர்களுடன், மிஸ்டர் மனைவி தொடரில் நடித்த அனுராதா, ராமச்சந்திரன் மகாலிங்கம், சர்வேஷ் உள்ளிட்ட பலர் இத்தொடரில் நடிக்கின்றனர். தங்க மீன்கள் தொடரின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சன் தொலைக்காட்சியில் புதிதாக 6 தொடர்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பாகவுள்ளது. அதில் ஒன்றாக தங்க மீன்கள் தொடர் இடம்பெறும் எனத் தெரிகிறது. விரைவில் இத்தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஷ்மாவின் வளர்ச்சி
சின்ன திரையில் பூவே பூச்சூடவா, அபி டெய்லர், கிழக்கு வாசல் உள்ளிட்ட தொடர்களில் நடித்த ரேஷ்மா, சமீபத்தில் நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது தங்க மீன்கள் தொடரிலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர் நடிக்கும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறுவதால், சமூக வலைதளங்களில் ரேஷ்மாவுக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் உள்ளனர். இதனால், தங்க மீன்கள் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | எஸ்.வி. சேகர் யாரென்றே தெரியாது! அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஷோபனா கருத்து!