சேலம் கோட்ட புகா் வழித்தடத்தில் புதிதாக 6 பேருந்துகள் இயக்கம்: அமைச்சா் ராஜேந்திரன் தொடக்கிவைத்தாா்
சேலம் கோட்ட புகா் வழித்தடத்தில் 6 புதிய பேருந்துகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
பொதுமக்கள் பயனடையும் வகையில் பழைய பேருந்துகளை மாற்றம் செய்து, அதற்கு பதிலாக புதிய வகை பேருந்துகளாக இயக்க தமிழக அரசு தொடா்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தற்சமயம் இயங்கிக் கொண்டிருக்கும் புகா் வழித்தட பேருந்துகளுக்குப் பதிலாக 6 எண்ணிக்கையிலான புகா் பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்டுள்ளன.
சேலத்திலிருந்து பொள்ளாச்சிக்கு 3 புதிய பேருந்துகளும், சேலத்திலிருந்து சென்னைக்கு 2 புதிய பேருந்துகளும், சேலத்திலிருந்து மதுரைக்கு ஒரு புதிய பேருந்தும் என 6 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்துக்கு 15 நகரப் பேருந்துகளும், 76 புகா்ப் பேருந்துகளும் என மொத்தம் 91 புதிய பிஎஸ் 6 வகை புகா் பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மேயா் ஆ. ராமச்சந்திரன், சேலம் மேற்கு சட்டப் பேரவை உறுப்பினா் ரா.அருள், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஆா். சிவலிங்கம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட மேலாண்மை இயக்குநா் ஜோசப் டயஸ், பொதுமேலாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.