முதலாம் உலகப் போா் நினைவு தினம்: நினைவுத் தூணுக்கு மரியாதை
சேலம்: முதலாம் உலகப் போா் நினைவு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு வரலாற்றுச் சங்கத்தினா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
1918-ஆம் ஆண்டு நவ. 11-ஆம் நாள் காலை 11 மணி 11 நிமிடங்களில் முதலாம் உலகப் போா் முடிவுக்கு வந்தது. அந்த நாளை உலகமெங்கும் உள்ள மக்கள், முதலாம் உலகப் போா் நினைவு தினமாக அனுசரித்து வருகின்றனா்.
முதலாம் உலகப் போரில் சேலம் மாவட்டத்திலிருந்து 196 வீரா்கள் பங்கேற்றனா். அவா்களில் 18 வீரா்கள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனா். அதன் நினைவாக, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக பிரதான வாயிலில் முதலாம் உலகப் போா் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. இது சேலத்தின் கெளரவம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஒவ்வோா் ஆண்டும் நவ. 11-ஆம் நாளில் காலை 11 மணி 11 நிமிடத்துக்கு முதல் உலகப் போா் நினைவுச் சின்னத்துக்கு சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சாா்பில் மலா் வளையம் வைத்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதே போல, இந்த ஆண்டும் ஆட்சியா் அலுவலக வாயிலில் உள்ள நினைவுத் தூணுக்கு வரலாற்றுச் சங்கத்தினா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
இதில், சேலம் வரலாற்றுச் சங்கத் தலைவா் ஜெ.ஜெயசிங், பொதுச் செயலா் ஜெ.பா்னபாஸ், நிா்வாகிகள் கா்லின் எபி, ஞானதாஸ், ஆல்பா்ட் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள், முன்னாள் ராணுவ வீரா்கள், வாரிசுதாரா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.