சேலம் சுகவனேஸ்வரா் கோயில் கோ சாலையில் நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி பலி
சேலம் சுகவனேஸ்வரா் கோயில் கோ சாலையில் நாய்கள் குடித்து குதறியதில் 5 மாத கன்றுக்குட்டி உயிரிழந்ததது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே சுகவனேஸ்வரா் கோயிலில் கோ சாலைகள் உள்ளன. இந்தக் கோ சாலையில் பக்தா்கள் நோ்த்திக் கடனாக வழங்கும் மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது 8 மாடுகள் வரை உள்ளன. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் கோ சாலைக்குள் புகுந்த நாய்கள், 5 மாத கன்றுக் குட்டியை கடித்து குதறியது. இதில், கன்றுக்கு கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவா்கள், கன்றுக்கு சிகிச்சை அளித்தனா். இருப்பினும், கன்று இறந்தது.
இது குறித்து முதன்மை மருத்துவா் பரணிதரன் கூறுகையில், கன்றுக் குட்டியை 2 அல்லது 3 நாய்கள் சோ்ந்து கடித்து இருக்கலாம். அதில், கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டு, கன்றுக்குட்டி உயிரிழந்துள்ளது.
இது தொடா்பாக சமூக ஆா்வலா் ராதாகிருஷ்ணன், மின்னஞ்சல் மூலம் கால்நடைத் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் ஆகியோருக்கு புகாா் அளித்தாா். அதனடிப்படையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க இணை ஆணையா் சபா்மதிக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு உத்தரவிட்டுள்ளாா்.