கொச்சியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 வங்கதேச தொழிலாளிகள் கைது
சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அதிகாரியின் மனைவிக்கு ஓராண்டு சிறை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அதிகாரியின் மனைவிக்கு ஓராண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கோவையைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன். இவா், பத்திரப் பதிவுத் துறையில் சேலம் மாவட்டத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.34.58 லட்சம் சொத்து சோ்த்துள்ளதாக கோபாலகிருஷ்ணன் மீதும், அவரின் மனைவி தீனா மீதும் கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கடந்த 2008-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு கோவை லஞ்ச ஒழிப்பு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே, கடந்த 2021-ஆம் ஆண்டு கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தாா். அவரின் மனைவி தீனா மீதான வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட தீனாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மோகனரம்யா புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.