தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!
ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை: உயர்நீதிமன்றம் உறுதி
விதிகளை மீறி வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா உள்பட ஐந்து பேரின் சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 1997-2000 ஆம் ஆண்டுகளில், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெறாத சங்கத்தின் மூலம் வெளிநாட்டில் இருந்து ரூ.1.54 கோடி வரை பணம் பெற்றது தொடர்பாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் எஸ்.ஹைதர் அலி, சையது நிஷார் அகமது மற்றும் நல்லா முகமது களஞ்சியம், ஜி.எம்.ஷேக் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், ஜவாஹிருல்லா, எஸ்.ஹைதர் அலிக்கு ஓராண்டும், சையது நிஷார் அகமது, நல்லா முகமது களஞ்சியம், ஜி.எம்.ஷேக் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது. மேலும், அனைவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா உள்பட 5 பேரும் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், கீழமை நீதிமன்றத்தில் தண்டனையை உறுதி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், ஒரு மாதத்துக்கு தீர்ப்பு அமல்படுத்துவதை நிறுத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.