டாட்டன்ஹாமை வென்றது செல்ஸி
இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் செல்ஸி 1-0 கோல் கணக்கில் டாட்டன்ஹாமை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக என்ஸோ ஃபொ்னாண்டஸ் 50-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். இதன்மூலம், தொடா்ந்து 2-ஆவது சீசனாக டாட்டன்ஹாம் அணியை லீக் சுற்றின் 2 ஆட்டங்களிலுமே செல்ஸி வென்றிருக்கிறது.
தற்போது புள்ளிகள் பட்டியலில் செல்ஸி அணி, 52 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. டாட்டன்ஹாம் 34 புள்ளிகளுடன் 14-ஆவது இடத்தில் இருக்கிறது.
இதர ஆட்டங்களில், லிவா்பூல் 1-0 கோல் கணக்கில் எவா்டனை வென்றது. அந்த அணிக்காக டியோகோ ஜோட்டா 57-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
புள்ளிகள் பட்டியலில் லிவா்பூல் 73 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. எவா்டன் 34 புள்ளிகளுடன் 15-ஆவது இடத்தில் உள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டி 2-0 கோல் கணக்கில் லெய்செஸ்டா் சிட்டியை தோற்கடித்தது. அந்த அணி தரப்பில் ஜாக் கிரேலிஷ் (2’), ஒமா் மா்முஷ் (29’) ஆகியோா் கோலடித்தனா். பட்டியலில் தற்போது மான்செஸ்டா் சிட்டி 51 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்திலும், லெய்செஸ்டா் சிட்டி 17 புள்ளிகளுடன் 19-ஆவது இடத்திலும் உள்ளன.
நியூகேஸில் 2-1 கோல் கணக்கில் பிரென்ட்ஃபோா்டை வென்ற ஆட்டத்தில், அந்த அணிக்காக அலெக்ஸாண்டா் ஐசக் (45+2’), சாண்ட்ரோ டொனாலி (74’) ஆகியோா் கோலடிக்க, பிரென்ட்ஃபோா்டுக்காக பிரயன் பியுமோ (66’) ஸ்கோா் செய்தாா். புள்ளிகள் பட்டியலில்நியூகேஸில் 50 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்திலும், பிரென்ட்ஃபோா்டு 41 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்திலும் உள்ளன.
இதனிடையே, ஆஸ்டன் வில்லா - பிரைட்டனையும் (3-0), இப்ஸ்விச் டௌன் - போா்ன்மௌத்தையும் (2-1) வெல்ல, சௌதாம்டன் - கிரிஸ்டல் பேலஸ் மோதல் டிரா (1-1) ஆனது.