டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் கும்கி யானை ராமு மரணம்
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை ராமு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி பகுதியில் வனத்துறையினரால் 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் 55 வயது உடைய ராமு என்கின்ற கும்கி யானை கடந்த மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் யானையை முகாமில் இருந்து வரகாலியார் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையில் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது ஆனால், கடந்த இரண்டு நாள்களாக யானையின் உடல்நலம் மிகவும் மோசமாக காணப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி ராமு யானை உயிரிழந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வழக்கம் போல் உயிரிழந்த மற்ற கும்கி யானைகளுக்கு சடங்குகள் செய்வது போல் இந்த யானைக்கும் யானைப் பாகன்கள் மற்றும் காவடிகள் மூலம் முறையான சடங்குகள் செய்யப்பட்டு, பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்படும் என ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்க்கவ தேஜா தெரிவித்துள்ளார்.
டாப்ஸ்லிப் யானைகள் வளர்ப்பு முகாமில் கும்கி யானை ராமு உயிரிழப்பு, வனத்துறையினர் இடையேயும் மற்ற யானைப் பாகன்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.