`டிக் டாக்’ சரோஜாதேவி நினைவிருக்கிறதா? - புகுந்த வீடு கதை பகிரும் லலிதாம்பிகை
'டிக் டாக்'கில் நடிகை சரோஜாதேவி சாயலில் பிளாக் அண்ட் ஒயிட் தமிழ்த் திரைப்படங்களின் பாடல்களுக்கு அழகழகாக முக பாவனைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த லலிதாம்பிகையை நினைவிருக்கிறதா..?
டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகும் இன்ஸ்டாவில் பிளாக் அண்ட் ஒயிட் பாடல்களுடன் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிற லலிதாம்பிகையின் வீட்டுப் பொங்கல் கொஞ்சம் வித்தியாசமானது. அதைப்பற்றி பேசவும், கூடவே அவர் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ளவும் அவருக்கு போன் செய்தோம்.
'ஹாய் மேம்' என்ற லலிதாவின் குரலில் அதே வாஞ்சையும் மென்மையும். எப்படி இருக்கேம்மா என்றதும், கல்யாணமாகி ஒன்றரை வருஷம் ஆகிடுச்சு மேம். இப்போ, சென்னையிலதான் இருக்கேன்'' என்ற லலிதாம்பிகை, தன்னுடைய திருமணம், கணவர் விக்னேஷ், பொங்கல் அனுபவம் என்று ஷேர் செய்ய ஆரம்பித்தார்.
"என்னோட அம்மாவும் விக்னேஷோட அம்மாவும் சின்ன வயசுல ஃப்ரெண்ட்ஸா இருந்திருக்காங்க. வளர்ந்ததும் காலேஜ், கல்யாணம்னு ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்க. இது எதுவுமே தெரியாம நானும் விக்னேஷும் சோஷியல் மீடியா மூலமா ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். என்னோட பிளாக் அண்ட் ஒயிட் இன்ஸ்டா ரீல்ஸை பார்த்துட்டு, 'உங்க ரீல்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. இதே மாதிரி தொடர்ந்து பண்ணுங்க'ன்னு எனக்கு கமெண்ட் பண்ணுவாரு. என்னோட வீடியோஸை எடிட் பண்றதுக்குகூட ஹெல்ப் பண்ணி இருக்காரு. இந்தப் பழக்கம் எங்களுக்குள்ள ஒரு நல்ல நட்பை ஏற்படுத்துச்சு.
எங்க நட்பைப்பத்தி வீட்ல சொல்றப்போ தான், எங்க அம்மாவும் அவங்க அம்மாவும் சின்ன வயசு ஃப்ரெண்ட்ஸ்னு தெரிய வந்துச்சு. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்ததும் எனக்கும் விக்னேஷுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பேச ஆரம்பிச்சாங்க. இந்த விஷயம் தெரிஞ்சதும், விக்னேஷ், 'லலிதாவை எனக்கும் ரொம்ப பிடிக்கும்'னு அவரோட அம்மாகிட்ட சொல்லியிருக்காரு. விஷயம் என் காதுக்கு வந்ததும் என்னை புரிஞ்சுக்கிட்ட நண்பனே கணவனா வந்தா நல்லா தானே இருக்கும்னு உடனே ஓகே சொல்லிட்டேன்'' என்றவரிடம், 'புகுந்த வீட்ல டிக் டாக் சரோஜாதேவி நீங்க தான்'னு தெரிஞ்சுதா என்றோம்.
"டிக் டாக்லேயும், இன்ஸ்டாலேயும் நடிகை சரோஜாதேவி அம்மா மாதிரி மேக்கப் போட்டு ரீல்ஸ் போடுறது நான்தாங்கறது என் பிறந்த வீட்டு சைடுலகூட நிறைய பேருக்கு தெரியாது. ஏன்னா, சரோஜாதேவி அம்மா மாதிரி மேக்கப் போடுறப்போ நான் ரொம்ப மெச்சூர்டா தெரிவேன். ஆனா, மேக்கப் இல்லாதப்ப ரொம்ப சின்ன பிள்ளையா தெரிவேன். அதனால, சொந்தக்காரங்கள்ல நிறைய பேருக்கு அந்தப் பழைய பாடல்கள் ரீல்ஸ் பண்றது நான்தான்னு தெரியவே தெரியாது. அதே மாதிரிதான் விக்னேஷ் வீட்லேயும் நடந்துச்சு. அவர் சொல்லித்தான் 'நான்தான் அந்த சரோஜாதேவி'ன்னு தெரிஞ்சது. அவரோட பெரியப்பா, 'உன்னோட பிளாக் ஒயிட் ரீல்ஸ்க்கு நான் ஃபேன் மா'ன்னு சொன்னது எனக்கு ஸ்வீட் சர்ப்ரைஸா இருந்துச்சு'' என்கிற லலிதாம்பிகை, சரோஜாதேவி மாதிரி மட்டுமில்லாம, நடிகை பானுமதி, வைஜெயந்தி மாலா, தேவிகா மாதிரியும் சில ரீல்ஸ் போட்டிருக்கார்.
''என் ஹஸ்பண்ட் விக்னேஷ் ஆடிட்டரா இருக்கார். நான் என்னோட பரதநாட்டியத்துல கவனம் செலுத்திட்டிருக்கேன். அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு இலவசமா பரதநாட்டியம் சொல்லிக் கொடுத்து திருப்பதி பிரம்மோற்சவத்தில் ஆட வச்சிருக்கேன்.
விக்னேஷுக்கும் கலைகள்ல ரொம்ப ஈடுபாடு இருக்கிறதால, அவரும் நானும் திருப்பதி பிரம்மோற்சவத்துல சிவனும் கங்கையுமா பரதமாடினோம். அவருக்கும் நான்தான் பரதநாட்டியம் சொல்லிக்கொடுத்தேன்'' சிரிக்கிற லலிதாம்பிகை, தங்கள் வீட்டுப் பொங்கல் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
''என் பிறந்த வீட்ல பொங்கல் பண்டிகையை கொஞ்சம் வித்தியாசமா செலிப்ரேட் பண்ணுவோம். அப்பாவுக்கு கார் ஓட்டுறதும் டிராவல் பண்றதும் ரொம்ப பிடிக்கும். அதனால, பொங்கல் அன்னிக்கு வீட்ல பொங்கல் வெச்சு சாமி கும்பிட்டதும், ஏதாவது ஒரு கிராமத்துக்கு கூட்டிட்டுப் போயிடுவார். அந்த கிராமத்துல இருக்கிறவங்களோட பேசிப் பழகி அவங்களோட பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துல கலந்துப்போம். ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு கிராமத்துக்கு கூட்டிட்டுப் போவார். முன்ன பின்ன தெரியாத மக்களோட அறிமுகமாகி பேசிப் பழகி அவங்களோட சேர்ந்து பண்டிகை கொண்டாடுறது ரொம்ப நல்ல அனுபவமாக இருக்கும்'' என்கிறார் லலிதாம்பிகை.
இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்கு..!
Vikatan Play
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...