குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு
டிஜிட்டல் அரஸ்ட் மோசடியாளர்களுக்கு உதுவும் ஆதார் எண்! எப்படி?
ஒரு மோசடி பற்றி மக்களிடமிருந்து புகார் வந்ததுமே, இவ்வாறு ஒரு மோசடி நடக்கிறது, மக்களே கவனம் என காவல்துறையினர் உடனடியாக எச்சரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் பலரும், நமக்கென்ன என்று இருந்துவிடுவதே, மோசடியாளர்களுக்கு வரப்பிரசாதமாக மாறி விடுகிறது.
எனவே, காவல்துறையினர் விடுக்கும் எச்சரிக்கைகளை என்னவென்று அறிந்து வைத்திருப்பது சாலச்சிறந்தது.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், டிஜிட்டல் அரஸ்ட் என்ற பெயரில், மோசடியாளர்களிடம் 35 லட்சத்தை ஏமாந்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அதில் பதிவு செய்யப்பட்ட குரல் ஒலித்தது. நான் அனுப்பிய வெளிநாட்டுப் பார்சல் திரும்பிவந்துவிட்டதாக அந்த அழைப்பில் கூறப்பட்டது. அது பற்றி அறிய எண் 1ஐ அழுத்துமாறு கூறியது. நானும் அவ்வாறு செய்தேன், உடனடியாக ஒரு பெண் அழைப்பில் வந்து பேசினார்.
அவர் கொரியர் நிறுவன ஊழியர் என்றும், அந்த பார்சல் எண் மற்றும் என் ஆதார் எண்ணையும் கூறி, அந்த பார்சலில் போதைப் பொருள் இருப்பதாகவும் கூறினார்.
இதில் ஒரே ஒரு இடத்தில்தான் நான் ஏமாந்துபோனேன். அது என்னுடைய சரியான ஆதார் எண் என்று கூறியுள்ளார்.
நான் அந்த பார்சலை அனுப்பவில்லை என்று கூறியும், தொடர்ந்து எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, நான் டிஜிட்டல் அரஸ்ட் செய்யப்பட்டதாக ஏமாற்றப்பட்டு, மும்பை காவல்துறை என சிலர் என்னிடம் பேசி ரூ.35 லட்சம் மோசடி செய்யப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
மோசடியாளர்கள், ஒரு குற்றச்சாட்டால் ஏற்பட்ட பதற்றத்திலிருந்து விடுபடுவதற்குள், ஒரு அரசியல்வாதியின் பண மோசடி வழக்கிலும் தனக்குத் தொடர்பிருப்பதாகக் கூறி, அந்த அரசியல்வாதியின் புகைப்படத்தைத் தனக்கு அனுப்பியதாகவும், அவரைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லியும் அவர்கள் என்னை காவல்துறை அதிகாரி என நம்பவைத்து பணத்தை மோசடி செய்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு எத்தனையோ காவல்துறையினர் நண்பர்களாக இருக்கிறார்கள், ஆனால், அப்போது எனது மூளை எதையும் யோசிக்கவில்லை. அவர்கள் எனது வங்கிக் கணக்கு முழுவதையும் ஆராய்ந்து அந்த தொகையை முழுக்க முழுக்க தங்களது வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டும், உங்கள் மீது குற்றம் இல்லை என நிரூபிக்கப்பட்டால், அந்தப் பணம் திரும்ப அளிக்கப்படும் என உறுதி அளித்தனர்.
நேரடியாக வங்கிக்குச் சென்று பணத்தை அனுப்பிவிட்டேன், ஆனால், பணம் திரும்பவரவில்லை. அப்போதுதான் காவல்நிலையம் சென்றபோது, இந்த டிஜிட்டல் அரஸ்ட் பற்றி எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் கூறி அது சைபர் கிரைம் என்று கூறினார்கள். ஆனால், தான் இதுவரை எந்த எச்சரிக்கையையும் கேட்டதில்லை என்று அவர் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.
எனவே, சரியான ஆதார் எண்ணை ஒருவர் சொல்வதால் மட்டும் அவரை நம்ப வேண்டாம் என்றும், நமது பெயர் மட்டும் ஆதார் எண்ணை எங்கிருந்தும் பெற முடியும் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.