டேட்டிங் செயலிகள் மூலம் 700 -க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய நபர் கைது!
தில்லியில் டேட்டிங் செயலிகள் மூலம் 700-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தில்லியைச் சேர்ந்த துஷார் பிஷ்ட் (23) நொய்டா பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பிபிஏ பட்டதாரியான இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர் மீது தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த டிச. 13 அன்று காவல்துறையில் புகாரளித்தார். அதில், துஷார் தனக்கு பம்பிள் டேட்டிங் செயலி மூலம் கடந்தாண்டு ஜனவரியில் அறிமுகமானதாகவும், தன்னை அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் என்றும் இந்தியாவிற்கு வேலை விஷயமாக வந்ததாகவும் அவர் கூறியதாக அந்தப் பெண் தெரிவித்தார்.
மேலும், தினசரி பேசியதன் மூலம் அந்தப் பெண்ணின் நம்பிக்கையைப் பெற்ற அவர், ஸ்னாப்சாட் மற்றும் வாட்சப் செயலிகளில் அவருடைய அந்தரங்கப் புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுப் பெற்றுள்ளார்.
இதையும் படிக்க | தில்லியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்: ஓவைசி குற்றச்சாட்டு!
நேரில் சந்திக்கலாம் என்று அந்தப் பெண் கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த துஷார், சில நாள்கள் கழித்து அந்தப் பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியே கசியவிடுவேன் எனக்கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்தப் பெண் பலமுறை அவருக்கு பணம் அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தனது குடும்பத்தினரிடம் இதனைத் தெரிவித்த அந்தப் பெண் காவல்துறையில் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்து தில்லி ஷாகர்பூர் பகுதியில் வைத்து துஷார் பிஷ்ட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைதுக்கு பின்னர் மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சிகரமான பல சம்பவங்கள் வெளியே தெரிய வந்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக தனக்கென சொந்தமாக சர்வதேச மொபைல் எண் வைத்துள்ள துஷார், அந்த எண்ணைப் பயன்படுத்தி பம்பிள், ஸ்னாப்சாட் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில் கணக்குகளைத் திறந்தார்.
அந்தத் தளங்களில் தன்னை அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் எனக் கூறிக்கொண்டு, பிரேசிலைச் சேர்ந்த மாடல் ஒருவரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு போலி ஐடிக்கள் மூலம் ஏமாற்றி வந்துள்ளார். மேலும், தொடர்ந்து தனது ஐடிக்களில் போலியான புகைப்படங்களை பதிவேற்றி வந்த அவர், 18 முதல் 30 வயதுள்ள பெண்களைக் குறிவைத்து நட்பு அழைப்புக் கொடுத்து வந்தார்.
இதையும் படிக்க | விண்வெளி செடி வளர்ப்பு சோதனை: காராமணி தேர்வு செய்யப்பட்டது ஏன்?
நட்பழைப்பை ஏற்றுக் கொண்டவர்களுடன் தொடர்ந்து பேசி நம்பிக்கையைப் பெறும் துஷார், அவர்களுடன் தனது போலியான புகைப்படங்களைப் பகிர்ந்து அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்களையும் விடியோக்களையும் கேட்டுப் பெற்றார்.
தொடக்கத்தில், இதனை சாகச மனநிலையில் செய்து வந்த துஷார் பின்னர் பணம் பறிக்கும் நோக்கத்தில் இதனைச் செய்ய ஆரம்பித்துள்ளார். பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்த அவர், பணம் தராமல் போனால் அவற்றை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க | வெண்டிலேட்டர் அகற்றம்: காங். எம்எல்ஏ உமா தாமஸின் உடல்நிலை குறித்த அப்டேட்
இதுபோன்று தில்லி மற்றும் பல பகுதிகளில் இதுவரை பம்பிள் செயலி மூலம் 500 பெண்களுடனும் ஸ்னாப்சாட், வாட்சப் மூலம் 200 பெண்களுடனும் தொடர்பில் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்களும் அவரது சாதனங்களில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணையில் பல பெண்களின் அந்தரங்க புகைபப்டங்களை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்ததை துஷார் ஒப்புக் கொண்டதாகவும், மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தில்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.