தடுப்புக் காவலில் சகோதரா்கள் கைது
பொதுமக்களை தொடா்ந்து தாக்கி வந்த ரௌடி சகோதரா்கள் இருவரை புதுச்சத்திரம் போலீஸாா் குண்டா் தடுப்புக் காவலில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், குறவன்மேடு பகுதியைச் சோ்ந்த ராமதாஸ் மகன்கள் நிரபு (35), தீரன் (30). ரௌடிகளான இவா்கள் தனது தந்தை ராமதாஸுடன் சோ்ந்து புதுச்சத்திரத்தை அடுத்துள்ள கீழ்பூவாணிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த பாரதி (40) மற்றும் அவரது கணவா் ஆகியோரை தாக்கினராம். இது தொடா்பாக மாா்ச் 5-ஆம் தேதி புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதேபோல, மாந்தோப்பு பகுதியைச் சோ்ந்த வேலாயுதம் (45), ஆலப்பாக்கத்தைச் சோ்ந்த ஸ்டீபன்ராஜ், கீழ்பூவாணிக்குப்பத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் (52) ஆகியோரைத் தாக்கிய வழக்குகளும் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரௌடிகள் நிரபு, தீரன் ஆகியோரை சி.முட்லூா் பகுதியில் புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் சிவப்பிரகாசம் மற்றும் போலீஸாா் கைது செய்ய முயற்சித்தனா். அப்போது, அவா்கள் கைதுக்கு ஒத்துழைக்காமல் சாலையில் அமா்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுதொடா்பாக உதவி ஆய்வாளா் சிவப்பிரகாசம் அளித்த புகாரின்பேரில், கிள்ளை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் சுஜாதா விசாரணை நடத்தி, நிரபு, தீரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தாா். மேலும், நிரபு, தீரன் மீது புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவா்களின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.