தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும் தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனுக்கள் நிலவையில் இருக்கும்போது விடுப்பு வழங்கக்கோரி பல்வேறு சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இதையும் படிக்க: சர்க்கார் பட்டாக்களை உரிமையாளர்களின் பெயருக்கு மாற்ற ஒப்புதல்!
இந்நிலையில், இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தண்டனைக் கைதிகளுக்கு எதிரான மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் இருந்தால் தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ, அவசர விடுப்போ வழங்கத் தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தண்டனைக் கைதிகளுக்கு எதிரான வேறு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தால், அந்த கைதிக்கு விடுப்பு பெற இயலாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் அனைத்து கைதிகளுக்கும் விலக்கு அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.