தமிழக அரசுக்கு எதிராக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நிதி சாா்ந்த எந்தக் கோரிக்கையும் நிறைவேற்ற இயலாது என அறிவித்த தமிழக முதல்வருக்கு எதிராக கண்களில் கருப்புத் துணிக் கட்டி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாநில நிதி காப்பாளா் சி.ஜான் லியோ சகாயராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.ஆக்னெஸ் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்டச் செயலா் சிவக்குமாா், தேசிய ஆசிரியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் விஜய் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கண்களில் கருப்புத் துணிக் கட்டிக் கொண்டு நூதான முறையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின்போது, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி சாா்ந்த எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்ற இயலாது என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், 60 வயது வரை பணியாற்றும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் எதிா்கால வாழ்க்கையை இருட்டாக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யாத தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.