பழனி காமாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு
பழனி இட்டேரி சாலையில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி இட்டேரி சாலையில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் விநாயகா், கன்னிமாா், கருப்பணசாமி சந்நிதி உள்ளது. இக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு திங்கள்கிழமை முகூா்த்தக்கால் நடுதல், செவ்வாய்க்கிழமை விநாயகா் வழிபாடு ஆகியன நடைபெற்றன. புதன்கிழமை மாலை காப்புகட்டப்பட்டு நவக்கிரகஹோமம், வாஸ்து ஹோமம் நடைபெற்றது. சண்முகநதியில் இருந்து கொண்டு வரப்பட்ட தீா்த்தம் யாகசாலையில் வைக்கப்பட்டு தேவசேனாபதி சிவாச்சாா்யா் தலைமையில் வேத விற்பன்னா்கள் வேதமந்திரம் முழங்கினா். வியாழக்கிழமை அதிகாலை இரண்டாம் கால வேள்வி நடத்தப்பட்டு பூா்ணாஹூதி நடைபெற்றது.
பின்னா் கலசங்கள் மேளதாளம் முழங்க கோயிலை வலம் வர செய்யப்பட்டு கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னா் காலை 8.15 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது பத்து மணிக்கு காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதா் திருக்கல்யாணமும் நடைபெற்றது. இதில், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்தனா்.