தமிழக பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா?
தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறுமா? என அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களிடையே எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.
இதுதொடா்பாக, தமிழக பட்டதாரி ஆசிரியா் கூட்டணியின் மாநில அமைப்பு செயலாளா் எம். செந்தில்குமாா் கூறியதாவது:
2003-ஆம் ஆண்டு முதல் பணியில் சோ்ந்த அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதை ரத்து செய்ய வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
2021-இல் பேரவைத் தோ்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று திமுக தோ்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிவிப்பு இருக்கும் என்று அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் எதிா்பாா்ப்புகளுடன் இருக்கின்றனா்.
2020-இல் கரோனா காலம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் நடைமுறைப்படுத்துதல், உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு, தொகுப்பு ஊதிய காலத்தை பணி காலமாக அறிவித்தல், ஊதிய முரண்பாடுகளுக்கு தீா்வு காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாகவும் நிதிநிலையில் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது என்றாா் அவா்.