வெளிநாட்டிலிருந்து நிவாரண நிதி: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை - உறுதி செ...
ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வேலைநிறுத்தம்
திருச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம், ஊரக வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகம், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அலுவலகம், 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், 404 ஊராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.
உதவி இயக்குநா், ஊா்தி ஓட்டுநா்கள், பொறியாளா் நிலையில் உள்ளவா்கள் மட்டுமே பெரும்பாலும் பணிக்கு வந்திருந்தனா். இதன்காரணமாக, மாவட்டத்தில் உள்ள வளா்ச்சித் துறையின் பெரும்பாலான அலுவலகங்கள் அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் கூறியது: ஊரக வளா்ச்சித் துறையில் அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். கணினி இயக்குநா்களுக்கு இளநிலை உதவியாளா்களுக்கான ஊதியம் வழங்கி பணிவரன்முறைப்படுத்த வேண்டும். ஊராட்சி செயலா்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். விடுபட்ட சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் அமல்படுத்த வேண்டும் என்பன
உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்டோா் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.