அரசு அலுவலா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கு
திருச்சி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன், வியாழக்கிழமை என 2 நாள்கள் நடைபெற்றது.
அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில் மாவட்டந்தோறும் உள்ள அனைத்துத் துறை அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு 2024-25ஆம் நிதியாண்டில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்திட அரசு ஆணையிட்டதன்பேரில் இந்த பயிலரங்கம் நடத்தப்பட்டது.
முதல்நாள் நிகழ்வை மாவட்ட வருவாய் அலுவலா் (நிலமெடுப்பு) ஆா். பாலாஜி தொடங்கி வைத்தாா். இணையத் தமிழ் என்ற தலைப்பில் துரை. மணிகண்டனும், ஆட்சிமொழிச் செயலாக்கம் மற்றும் அரசாணைகள் என்னும் தலைப்பில் மூ. பாலகிருஷ்ணனும், ஆட்சிமொழி ஆய்வும், குறை களைவு நடவடிக்கைகளும் என்னும் தலைப்பில் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் க. சித்ரா ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில், ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்று, ஆட்சிமொழி செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமான வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்துக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும், ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கத்தில் பங்கேற்ற அரசுப் பணியாா்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும் வழங்கினாா்.
மொழிப்பயிற்சி எனும் தலைப்பில் புதுக்கோட்டை, மாமல்லன் போட்டித் தோ்வு பயிற்சி நடுவத்தின் முனைவா் ப. செந்தில்முருகன், ஆட்சிமொழி சட்டம் வரலாறு என்னும் தலைப்பில் மனிதவள மேம்பாட்டு பயிற்றுநா் இரா. அறிவழகன், மொழிப்பயிற்சி கலைச்சொல்லாக்கம் என்னும் தலைப்பில் உதவிப் பேராசிரியா் பூ. ரவிக்குமாா் ஆகியோா் அரசு அலுலா்களுக்கு பயிற்சி அளித்தனா். இக்கருத்தரங்கில், முனைவா்கள் மு. ஜோதிலட்சுமி, கி. சதீஷ்குமாா், ரவிக்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.