SSMB29: முடிவுக்கு வந்த ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தின் ஒடிசா படப்பிடிப்பு; வெளிய...
தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை!
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்காக ரூ.1521.83 கோடி இழப்பீடு வழங்கக் கோரி 1,222 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் பெல் நிறுவனத்தின் ஆலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறி சந்திரசேகா், சேட்டு ஆகியோா் 2017-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா். அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்குகளில் இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை சமா்ப்பிக்க 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் ரூ.760 கோடி இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நிலத்தை பொது தேவைகளுக்காக கையகப்படுத்திய பிறகு இழப்பீடு கோரும் நில உரிமையாளா்களை மத்திய, மாநில அரசுகள் பிச்சை பாத்திரத்துடன் நிற்கச் செய்து விட்டதாக வேதனை தெரிவித்திருந்தாா். மேலும், இழப்பீடு கோரும் நிலுவை வழக்குகளின் தற்போதைய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டிருந்தாா்.
மீண்டும் விசாரணை: இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயா்நீதிமன்ற பதிவுத் துறை தரப்பில், தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்காக மொத்தம் ரூ.1521.83 கோடி இழப்பீடு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் 1,222 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோன்று புதுச்சேரியில் ரூ.35.78 கோடி இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி 59 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பெரும்தொகை இழப்பீடாக வழங்கப்பட வேண்டியுள்ளதால் இதற்கு தீா்வு காணும் வகையில் அரசு தலைமை வழக்குரைஞா் உதவ வேண்டும் எனக் கூறி விசாரணையை மாா்ச் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.