தமிழகத்தில் மிதமான மழை நீடிக்கும்
தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜன.2) முதல் ஜன.7 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும், வியாழக்கிழமை (ஜன.2) முதல் ஜன.7 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜன.2,3-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
இதற்கிடையே ஜன.2 முதல் ஜன.4 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 180 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நாலுமுக்கு (திருநெல்வேலி) - 160 மி.மீ., காக்காச்சி (திருநெல்வேலி) - 150 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி) - 130 மி.மீ. மழை பதிவானது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.