பல்கலை. மாணவி விவகாரம்: ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆதாரங்கள் பறிமுதல்
சென்னை: அண்ணா. பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வீட்டிலிருந்து முக்கிய ஆதாரங்களும் லேப்டாப் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன் வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இன்று காலை முதல் சோதனை செய்து வருகிறார்கள்.
காலை முதல் 3 மணி நேரம் சோதனை நடத்தப்பட்ட நிலையில், உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு மணி நேரம் சோதனை நீடித்தது.
ஞானசேகரன் வீட்டுக்குள் இருந்து, முக்கிய ஆதாரங்கள் சிலவும், அவர் பயன்படுத்திய லேப்டாப் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா!
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அண்ணா பல்கலை. மாணவி உள்ளிட்டோரிடம் சிறப்பு விசாரணைக் குழு நேரில் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டியிருக்கும் நிலையில், கோட்டூரில் உள்ள ஞானசேகரன் வீட்டில் இன்று காலை சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஞானசேகரன் வீட்டுக்கு இன்று காலை 11 மணியளவில் வந்த அதிகாரிகள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, முக்கிய ஆதாரமான, சம்பவத்தின் போது ஞானசேகரன் அணிந்திருந்த தொப்பியை அவரது வீட்டிலிருந்து கைப்பற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பயின்று வரும் மாணவி கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி இரவு, பல்கலைக்கழகத்துக்குத் தொடர்பில்லாத வெளி நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
நீதிமன்றத்தின் முதற்கட்ட உத்தரவில், சென்னை பெருநகர காவல் துறை அண்ணாநகா் துணை ஆணையா் புக்யா சினேகா பிரியா, ஆவடி மாநகர காவல் துறை துணை ஆணையா் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையா் பிருந்தா ஆகியோா் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது.
மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குடன், முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கையும் சோ்த்து இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, ஏற்கெனவே போலீஸாா் பதிவு செய்த எஃப்ஐஆா், கைதான ஞானசேகரன் பற்றிய விவரங்கள், புலனாய்வு விசாரணை விவரங்கள், ஆவணங்கள், தடயங்கள் ஆகியவை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதனைப் பெற்றுக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். சம்பவ இடத்தையும் நேரில் ஆய்வு செய்தனர். பிறகு, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோா், பாதிப்புக்குள்ளான மாணவி, சம்பவத்தன்று மாணவியுடன் இருந்த மாணவா் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், மற்றும் மாணவி விவகாரத்தில் சிக்கிய நபா் எந்த கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டாா் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் சேகரித்துக் கொண்டனா்.
அடுத்தகட்டமாக, கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் விசாரணை நடத்த அக்குழு திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில்தான், இன்று காலை அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.