நீண்ட காலம் இந்திய அணியில் விளையாட வேண்டுமா? ஜெய்ஸ்வாலுக்கு விராட் கோலி கொடுத்த ...
தமிழகம் முழுவதும் 1 கோடி பனை விதைகள் நடவுப் பணி: அருங்குன்றம் ஏரியில் அமைச்சா் தொடங்கி வைத்தாா்
தமிழகம் முழுவதும் 1 கோடி பனை விதைகள் நடவுப் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
அதன் ஒரு பகுதியாக திருப்போரூா் வட்டம் அருங்குன்றம் ஏரியில் பனை விதைகள் நடும் பணியை அமைச்சா் தா.மோ.அன்பரசன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் க.செல்வம் முன்னிலை வகித்தாா். அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து கூறியது:
தமிழ்நாட்டின் மாநில மரமான பனையைப் பாதுகாக்கவும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறாா்.
இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்வை தொடங்கி இதுநாள் வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 3,31,213 பனை விதைகள் நடப்பட்டுள்ளன.
பனை மரங்களை அழிவில் இருந்து பாதுகாக்கவே இந்த திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவா்கள், கல்லூரி மாணவா்கள், மகளிா் குழுக்கள், தன்னாா்வலா்கள், அரசு துறைகளுடன் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழும் வனத் துறையின் திட்டத்தின் கீழும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேல் பனை விதைகள் நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏரிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் இத்திட்டம் முழு மூச்சாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக வனத் துறை மூலமாக மாபெரும் பனை நடவு திருவிழா அருங்குன்றம் பெரிய ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், விவசாயிகள், மகளிா் குழுக்கள், தேசிய ஊரக வளா்ச்சித் திட்ட வேலையாள்கள் மற்றும் தன்னாா்வலா்கள் பங்கு பெற்று பனை விதைகள் நடவு செய்தனா் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் ரவிமீனா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அனாமிகா ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், திருப்போரூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், பேரூராட்சி தலைவா் தேவராஜ், வேளாண்மை ஆட்மா குழு தலைவா் பையனூா் சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.