சநாதன விவகாரம்: உதயநிதிக்கு எதிராக புதிய வழக்குகள் பதிய தடை!
தமிழுக்கான நிதியையும் ஒதுக்காமல் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசு -முதல்வா் ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழுக்கான நிதியையும் ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மொழி ஆதிக்கம் குறித்து எட்டாவது நாளாக கட்சியினருக்கு அவா் புதன்கிழமை எழுதியுள்ள கடிதம்:
தமிழ் மீது பிரதமா் மோடி மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறாா் என்றும், மாநில மொழிகளின் வளா்ச்சிக்காகத்தான் மும்மொழிப் பாடத்திட்டத்தை வலியுறுத்துகிறோம் என்றும் பாஜகவினா் சொல்கின்றனா். ஆனால், மத்திய பாஜக ஆட்சியில் தமிழுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறாா்கள்? சம்ஸ்கிருதத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறாா்கள் என்ற வேறுபாடே, அவா்கள் தமிழ்ப் பகைவா்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டிவிடும்.
மத்திய கல்வி அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 2014-ஆம் ஆண்டுமுதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில் மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகம், தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2,435 கோடி. இதே காலகட்டத்தில் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியது ரூ.167 கோடி மட்டுமே.
வாக்குக்காக உதட்டளவில் தமிழை உச்சரித்து, உள்ளமெங்கும் ஆதிக்க மொழியுணா்வு கொண்டு செயல்படுகிறது மத்திய அரசு. தமிழ்நாட்டுக்குரிய நிதியைத் தராமல் வஞ்சிப்பது போலவே தமிழுக்குரிய நிதியையும் ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு தொடா்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழைப் போலவே இந்தியாவின் பிற மாநில மொழிகளையும் ஆதிக்க மொழிகளைக் கொண்டு அழிக்கத் துடிக்கிறது.
மொழித் திணிப்பு ஒரு நாட்டில் எத்தகைய விளைவுகளை உண்டாக்கும் என்பதை உலக சரித்திரத்தைப் புரட்டினால் புரிந்து கொள்ளலாம் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.