தமிழ் எழுத்தாளா்களை நினைவுகூரும் பேச்சுப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு
திருவண்ணாமலையில் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் தமிழ் எழுத்தாளா்கள், தமிழறிஞா்களை நினைவுகூரும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்தது.
முதுமுனைவா் ஔவை நடராசன், வாழியூா் இராசவேலன், எழுத்தாளா் சாவி, கவிஞா் தாராபாரதி ஆகியோரின் தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு, தமிழ் மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில், பிப்.5-ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.
திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பிற்பகல் 2 மணிக்கும் பேச்சுப்போட்டி நடைபெறும்.
போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.2 ஆயிரத்துடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டிகளில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள், விதிமுறைகள் கல்லூரி இணை இயக்குநா் மூலம் அனைத்து கல்லூரிகளுக்கும், முதன்மைக் கல்வி அலுவலா் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.