நெருக்கடியான நேரத்தில் நமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும்: மோடிக்கு ராகுல் கடிதம்!
தலைமுடி, மீசை, தாடி வளர்ச்சியைத் தூண்டுமா டெர்மா ரோலர்? – மருத்துவர் விளக்கம்!
''காலேஜ் படிக்கிற பசங்க மீசை, தாடி வளரவும் நெற்றியில் வரும் வழுக்கையைச் சரி செய்யவும் டெர்மா ரோலர் பயன்படுத்துறாங்க. அதுவும், மருத்துவரைச் சென்று பார்க்காமல் வீட்டிலேயே இந்த டெர்மா ரோலரைப் பயன்படுத்திட்டு வராங்க'' என்கிற தோல் மருத்துவர் நித்திலா சந்திரசேகரிடம், இதை யார், எப்படி பயன்படுத்துவது என்பன குறித்து கேட்டோம்.

முடி உதிர்தலுக்கோ அல்லது தாடி, மீசை வளரவோ டெர்மா ரோலரைப் பயன்படுத்துவதற்கு முன்னால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. எந்த அளவுக்கு முடி உதிர்தல் இருக்கிறது; எந்தக் காரணத்தால் முடி உதிர்கிறது; எதனால் தாடி, மீசை வளராமல் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, உங்களுக்கு இருக்கும் பிரச்னைக்கு டெர்மா ரோலர் பலன் தருமா என்பதை ஒரு தோல் மருத்துவரிடம் சென்று தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ரீல்ஸ்களில் பார்த்துவிட்டு ஆன்லைனில் வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவது பாதுகாப்பானதும் கிடையாது. மருத்துவரைச் சென்று பார்க்கும்போதுதான் அவர்கள் டெர்மா ரோலரை எப்படி, எந்த அதிர்வெண்ணில் பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்வார்கள். அதன்படி பயன்படுத்துவதுதான் சரி. அதுதான் பலனும் தரும்.

டெர்மா ரோலர் கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து முடி வளர்ச்சியைத் தூண்டி, தலை மற்றும் முகத்தில் நன்கு முடி வளர பயன்படுகிறது. முகப்பருவினால் ஏற்பட்ட வடுவைச் சரி செய்யவும் இது பயன்படுகிறது. அதேநேரம், முகத்தில் பருக்கள் இருக்கும்போது இதைப் பயன்படுத்தக்கூடாது.
டெர்மா ரோலரை 'மைக்ரோ நீடிலிங்' என்றும் சொல்லலாம். இதில் சின்னச் சின்ன ஊசிகள் இருக்கும். டெர்மா ரோலரை பிரச்னையுள்ள பகுதியில் வைத்து ரோல் செய்யும்போது, அதிலிருக்கிற ஊசிகளால் செல்களில் தூண்டல் ஏற்பட்டு கொலாஜென் உற்பத்தி ஆகும்.
உடம்பில் ஓர் இடத்தில் காயம் ஏற்பட்டால், அந்தக் காயத்தை சரிசெய்ய வளர்ச்சிக் காரணி செயல்படுவதுபோல, சின்னச் சின்ன ஊசிகள் கொண்ட டெர்மா ரோலரை தலை அல்லது முகத்தில் ரோல் செய்யும்போது, அந்தப்பகுதிகளில் இருக்கிற செல் உற்பத்தியை மேம்படுத்தி, கொலாஜினை உற்பத்தி செய்து முடி வளர உதவி செய்யும்.

டெர்மா ரோலரை அதிகமாகப் பயன்படுத்துவதும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதைத் தவறுதலாக அல்லது அதிகமாகப் பயன்படுத்தும்போது, அந்த இடத்தில் எரிச்சல் மற்றும் ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதைத் தவிர்க்க எந்தப் பிரச்னைக்கு, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அதற்காகத்தான் ஒரு தோல் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு டெர்மா ரோலரை பயன்படுத்துங்கள் என்கிறேன்'' என்று முடித்தார் தோல் மருத்துவர் நித்திலா சந்திரசேகர்.