நெருக்கடியான நேரத்தில் நமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும்: மோடிக்கு ராகுல் கடிதம்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியாவின் ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்டிய மத்திய அரசு, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளித்தது.
இதையடுத்து, மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:
”பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில், பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் எப்போதும் ஒன்றாக நிற்போம் என்பதை இந்தியா காட்ட வேண்டும்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும் என்று எதிர்க்கட்சி நம்புகிறது. அங்கு மக்களின் பிரதிநிதிகள் தங்கள் ஒற்றுமையையும் உறுதியையும் காட்ட முடியும்.
அத்தகைய சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.