புதுச்சேரி: "ஓட்டுக்கு ரூ.2,500; தொகுதிக்கு ரூ.5 கோடி..." - ரங்கசாமி மீது காங்கி...
தானாக திறந்த மதகு: வசிஷ்ட நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு
ஆணை மடுவு நீர்த்தேக்கத்திலிருந்து தானாக திறந்த மதகால், திடீரென தண்ணீர் வெளியேறி வசிஷ்ட நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை எதிர்பார்க்காத அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிகுட்டை பகுதியில் ஆனை மடுவு நீர் தேக்கம் அமைந்துள்ளது. 67.25 அடி உயரத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்த கன மழை காரணமாக 65 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது.
மூன்று மதகுகள் கொண்ட நீர்த்தேக்கத்திலிருந்து நடுப்பகுதியில் உள்ள மதகு திடீரென திறந்ததால் ஆர்ப்பரித்து தண்ணீர் வெளியேறியது. இதனால் வசிஷ்ட நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வசிஷ்டநதியில் தண்ணீர் வெளியேறுவதைக் காண குவிந்து வருகின்றனர்.
இது குறித்த தகவல் அறிந்த பொதுப்பணி துறையினர், தண்ணீர் வெளியேறிய மதகுகளை உடனடியாக அடைத்தனர். தொடர்ந்து வசிஷ்ட நதியில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என வருவாய்த் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
நீர்த்தேக்கத்தில் முழுமையாக தண்ணீர் உள்ள நிலையில் அணையின் மதகு எப்படி தானாக திறந்தது என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.