`எங்களை உட்காரச் சொல்லுங்கள்' - கவனிக்க மறந்த கதைகள்; கள ஆய்வு ரிப்போர்ட்
குடும்ப கஷ்டத்துக்காக நின்னுட்டிருக்கோம்:
"காலையில எட்டு மணிக்கு வேலைக்கு வர்றோம். வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போறதுக்கு நைட்டு பத்து மணிக்கு மேல ஆயிடும். குறைந்தபட்சமா பார்த்தாலும் ஒரு நாளைக்கு 10 மணி நேரமாச்சும் தொடர்ந்து வேலை பார்க்கிறோம். கொஞ்சம் நேரம் உட்காரலாம்னா அதுக்கு எங்களுக்கு நேரமும் இருக்காது; உட்கார நாற்காலியும் இருக்காது. டீ, காபிகூட நாங்க நிக்கிற இடத்துக்கே வந்துடும்கிறதால, அப்பவும் எங்களால உட்கார முடியாது. மதியம் சாப்பாடு நேரத்துல 20 நிமிஷம் உட்காருவோம், அவ்ளோதான். குடும்ப கஷ்டத்துக்காக கால்வலியையும் இடுப்பு வலியையும் பொறுத்துக்கிட்டு நின்னுட்டிருக்கோம்" - பிரபலமான நகைக்கடையொன்றில் சேல்ஸ் கேர்ளாக வேலைபார்க்கும் பெண் ஒருவரின் வலிமிகுந்த வார்த்தைகள் இவை.
"காலையில எட்டு மணிக்கு நிக்க ஆரம்பிச்சா, மதியம் சாப்பாடு நேரம்போக நைட்டு 10 மணி வரைக்கும் நின்னுட்டே தான் இருக்கணும். கஸ்டமர்ஸ் கடைக்கு வந்துட்டே இருப்பாங்க. நான் டோக்கன் போடுற இடத்துல இருக்கறதால கஸ்டமர்ஸோட பையை வாங்கி வைக்கிறது, டோக்கன் போடுறது, பையை திருப்பிக் கொடுக்கிறதுன்னு ஒரு நிமிசம்கூட ஓய்வு கிடைக்காது. இதுல எங்க உட்கார்றது. இதுல பண்டிகை நாளெல்லாம் வந்திடுச்சுன்னா கால்ல சக்கரம் கட்டிக்காத குறைதான்'' - ஒரு ஜவுளிக்கடலின் முகப்பில் கஸ்டமர்களின் பைகளுக்கு டோக்கன் கொடுக்கும் ஆண் ஊழியரின் வேதனை இது.
12 மணிநேரத்தையும் தாண்டிய வேலை:
''இது வருசம் முழுக்க கூட்டம் வர்ற ஏரியாங்க. இங்க இருக்கிற கடைகள்ல வேலைபார்க்கிறவங்களோட நிலைமையெல்லாம் ஒரே மாதிரிதான். காலெல்லாம் உடைஞ்சுபோற மாதிரி வலிக்கும். எப்படா லஞ்ச் டைம் வரும்; கொஞ்ச நேரம் உட்காரலாம்னு ஏக்கமா இருக்கும். இதுல பீரியட்ஸ் வேற வந்திடுச்சின்னா இன்னும் கொடுமைதான். எவ்ளோ வலிச்சாலும் சிரிச்ச முகத்தோட கஸ்டமர்ஸுக்கு துணி எடுத்துக்காட்டணும். வீட்லேயும் வேலை செஞ்சுட்டு, இங்கேயும் வேலை செய்யுறதால எப்பவும் உடம்பு சோர்வாதான் இருக்கும். என்ன செய்யுறது..? இதைவிட பெரிய கொடுமை ஒண்ணு இருக்குங்க. கடையோட ஹாஸ்டல்ல தங்கி வேலைபார்க்கிறவங்க ஒருநாளைக்கு 12 மணி நேரத்தையும் தாண்டி வேலை பார்ப்பாங்க. எங்க நிலைமையெல்லாம் ஒண்ணும் சொல்றதுக்கில்லீங்க'' - தி.நகரில் உள்ள துணிக்கடையில் வேலைபார்க்கும் பெண்ணின் கண்ணீர் வார்த்தைகள் இவை.
"நான் 11 வருசமா சேல்ஸ்மேனா வேலைபார்த்துட்டிருக்கேன். தொடர்ந்து கஸ்டமர் வந்துகிட்டே இருந்தா பாத்ரூம் போகக்கூட நேரம் கிடைக்காது. அப்படி அடக்கி அடக்கி எனக்கு கிட்னில கல்லே வந்துடுச்சு. இப்பல்லாம் அடிக்கடி கால் வீங்கிடுது. நிறைய தண்ணி குடிங்க; யூரினை அடக்காதீங்கன்னு டாக்டர் சொல்றார். ஆனா, இந்த வேலையில அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. எனக்கும் இதவிட்டா வேற வேலை தெரியாது" - நடுத்தர வயதில் இருக்கும் சேல்ஸ்மேன் ஒருவரின் கையறுநிலை புலம்பல் இது.
உட்காரும் உரிமை:
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நின்றுகொண்டே வேலைபார்ப்பவர்களுக்கு, 2018-ல், கேரளாவில் உட்காரும் உரிமையை பெற்றுத்தந்தது அம்மாநிலத்தின் தொழிலாளர் நலச்சட்டம். ஆனால், அந்த உரிமை அவ்வளவு சுலபமாக கிடைத்துவிடவில்லை. தெருவில் இறங்கிப் போராடிப் பெற்ற உரிமை அது. இதையடுத்து 2021-ல் தமிழ்நாட்டிலும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் 'உட்காரும் உரிமை'க்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழிலாளர்களின் உட்காரும் உரிமையை கட்டாயப்படுத்தி அறிவித்தது அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், விற்பனைப்பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உட்காரும் உரிமை கிடைத்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள சென்னையின் சில கடைவீதிகளுக்கு சென்றோம். அப்போதுதான் மேலே பேசியுள்ள நால்வரும், இன்னமும் எதுவுமே மாறவில்லை என்பதை வேதனையுடன் நம்முடன் பகிர்ந்துகொண்டார்கள்.
எங்கும் நிலவுகிற துயரம்:
நகைக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் என பல்வேறு வகையான கடைகளுக்குள் சென்று பார்த்தோம். பாதிக்கும் மேற்பட்ட கடைகளில் ஊழியர்கள் உட்கார்வதற்கு ஓர் இருக்கைகூட போடப்படவில்லை. கஸ்டமர்களை கவனித்துக்கொண்டிருக்கிற பலரும் நின்றுகொண்டிருக்க, தன்னருகே கஸ்டமர் இல்லாதவர்கள் பொருள்களை எடுத்து வைத்துக்காட்டும் டேபிள் மீது லேசாக சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தார்கள். சில கடைகளில் நாற்காலிகள் இருந்தாலும், கஸ்டமர்ஸ் வந்துகொண்டே இருக்க, விற்பனைப்பிரிவிலும் பில் போடும் பிரிவிலும் தொடர்ந்து நின்றுகொண்டே தான் இருக்கிறார்கள். இதில் பாலின பேதமெல்லாம் இல்லை. அங்கேயே சிறிது நேரம் உலவியபோது தெரிந்துகொண்ட விஷயம் இது. தி.நகரில் இருக்கின்ற பிரபலமான கடைகளில் ஆரம்பித்து புரசைவாக்கம், சென்ட்ரல் என சென்னையில் இருக்கிற ஷாப்பிங் ஏரியாக்களில் இருக்கின்ற சிறிய கடைகள் வரைக்கும் இதுதான் நிலைமை.
ஏற்படும் ஆரோக்கிய சிக்கல்:
தங்கள் 'உட்காரும் உரிமை'க்காக குரல் எழுப்பக்கூட நேரமில்லாமல் நின்றுகொண்டே உழைக்கிற அவர்களுக்கு எதிர்காலத்தில் என்னென்ன ஆரோக்கிய பிரச்னைகள் வரும் தெரியுமா? ''படுத்திருக்கும்போது சீராக இருக்கிற நம்முடைய ரத்த ஓட்டம், நின்றிருக்கும்போது புவியீர்ப்புக்கு எதிராகத்தான் செயல்படும். அப்படி செயல்படுவதற்கு கால்களின் தசைகளும் ஒத்துழைக்க வேண்டும். எந்நேரமும் நின்றுகொண்டிருப்பதால் பலவீனமான கால் தசைகளால் தங்களுடைய பணியை சரியாக செய்ய முடியாது. விளைவு, ரத்தத்தில் கழிவு தேங்குதலில் ஆரம்பித்து, கால் வீக்கம், வெரிகோஸ் வெய்ன், சிறுநீரகக்கல், அரிதாக சிலருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து ஆக்சிஜன் கிடைக்காமல் மயங்கியும் விழலாம். மாதவிடாய் நாட்களிலும் இவ்வாறு தொடர்ந்து நின்றுகொண்டே இருந்தால் மயக்கம் வரும்'' என்று எச்சரிக்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ராஜேஷ்.
பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள், நடுத்தர வயதினர், ஆண்கள் - பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் தங்கள் பொருளாதார தேவைக்கு இந்த 'விற்பனை வேலை'யைத்தான் நம்பியிருக்கிறார்கள். தங்கள் வாழ்வாதாரமே இதுதான் எனும்போது, தங்களுடைய உரிமைக்காக குரல் எழுப்பும் துணிவு அவர்களுக்கு இல்லாமல் போகலாம். ஆனால், அவர்களுடைய நலன் கருதி, 'உட்காரும் உரிமை'க்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்த தமிழக அரசு, அதனை தமிழ்நாடு முழுக்க இருக்கிற அனைத்து வணிக நிறுவனங்களும் பின்பற்றுகின்றனவா என்பதையும் அடிக்கடி கண்காணித்தால் நலமாக இருக்கும் என்பதே நம் விருப்பம்!
VIKATAN PLAY- EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...