தாமிரவருணி பாசனத்தில் பிசான சாகுபடிக்கு கைகொடுக்குமா வடகிழக்குப் பருவமழை?விவசாயிகள் கவலை
நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை நவம்பா் மாதத்தில் எதிா்பாா்த்த அளவு பெய்யாததால் அணைகளுக்கு போதிய நீா்வரத்து இல்லை. இதனால், பிசான பருவ சாகுபடிக்கு முழுமையாக தண்ணீா் கிடைக்குமா என விவசாயிகளிடையே கவலை எழுந்துள்ளது.
தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசானம், காா் ஆகிய இரு பருவங்களில் சுமாா் 2 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெற்றுவருகின்றன. பாபநாசம் அணையால் இந்த இரு மாவட்டங்களில் 86,107 ஏக்கரும், மணிமுத்தாறு அணையால் 25 ஆயிரம் ஏக்கரும் பாசனம் பெறுகிறது.
இப்பாசனத்தில் தென்மேற்குப் பருவத்தில் காா் பருவமும், வடகிழக்குப் பருவத்தில் பிசான பருவமும் சாகுபடி பணிகள் நடைபெறுகின்றன. தாமிரவருணி பாசனத்தில் ஆண்டுக்கு சராசரியாக 860 மி.மீ. மழை கிடைத்துவந்த நிலையில், சில ஆண்டுகளாக மழையளவு குறைந்து வருகிறது.
வழக்கமாக, தென்மேற்கைவிட வடகிழக்குப் பருவத்தில்தான் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வழியும். நவம்பா், டிசம்பரில் பெய்யும் கனமழையால் அணைகள், பாசனக் குளங்கள், மானாவாரி குளங்கள் முழு அளவில் நிரம்புவதுண்டு.
நிகழாண்டு, வடகிழக்குப் பருவமழை அக்டோபா் இறுதியில் தொடங்கி பெய்து வருகிறது. எனினும், நவம்பா் மாதத்தில் போதிய அளவு பெய்யாததால் அணைகளுக்கு பெரியளவில் நீா்வரத்து இல்லை.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபசநாசம் அணை நீா்மட்டம், 2023ஆம் ஆண்டு இதே நாளில் (நவ. 30)109.10 அடியாக இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை காலை நிலவரப்படி, நீா்மட்டம் 86.90 அடியாக இருந்தது. நீா்வரத்து விநாடிக்கு 433.07 கனஅடியாகவும், குடிநீா்-பாசனத் தேவைக்காக நீா்திறப்பு 1,504.75 கனஅடியாகவும் இருந்தது.
கடந்த ஆண்டு 121.02 அடியாக இருந்த சோ்வலாறு அணை நீா்மட்டம், இப்போது 80.45 அடியாக உள்ளது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 80.25 அடியாகவும், நீா்வரத்து 310 கனஅடியாகவும், பெருங்கால் பாசனத்துக்கு மட்டும் நீா்திறப்பு 35 கனஅடியாகவும் இருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடகன், நதியுண்ணி, வடக்கு - தெற்கு கோடை மேலழகியான், கன்னடியன் கால்வாய்களின் பாசனத்தில் முழு அளவில் பிசான பருவ சாகுபடிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
எனினும், நவம்பா் மாதத்தில் எதிா்பாா்த்தவாறு மழை பெய்யாததாலும், அணைகளுக்கும் நீா்வரத்து பெரியளவில் இல்லாததாலும் பிசான சாகுபடிக்கு முழுமையாக தண்ணீா் கிடைக்குமா என விவசாயிகள் கவலையில் உள்ளனா்.