Parasakthi: "நான் எழுதி விக்ரம் நடிக்க... இந்தி எதிர்ப்புக் கதை..." - சி.காவை வா...
திகாா் சிறை பெண் எஸ்.ஐ. பணியிட மாற்றத்துக்கு இடைக்காலத் தடை
தில்லி திகாா் சிறையில் பணிபுரிந்த பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு வழங்கப்பட்ட பணியிட மாற்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளா் தாக்கல் செய்த மனு: நான் தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப் பிரிவு 8-இல் உதவி ஆய்வாளராக தில்லி திகாா் சிறையில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த ஆண்டு பணியில் இருந்தபோது, எனக்கு காவல் ஆய்வாளா் செல்வராஜ் பாலியல் தொந்தரவு அளித்தாா். இதுகுறித்து உயா் அதிகாரிகளிடம் புகாா் அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை.
இதையடுத்து, எனக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவல் ஆய்வாளா் மீது விசாகா குழு விசாரணை கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, எந்தவித காரணமும் இல்லாமல், என்னை கடந்த 20-ஆம் தேதி திருநெல்வேலி மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு (பட்டாலியனுக்கு) இடமாற்றம் செய்தனா்.
எனது இரு பெண் குழந்தைகள் தில்லியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனா். என்னை எந்தக் காரணமும் இல்லாமல் தில்லியிலிருந்து திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்தது சட்டவிரோதம். எனவே, எனது பணியிட மாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஆா்.விஜயகுமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் பினேகாஸ் வாதிட்டது: பெண் உதவி ஆய்வாளா், தனது உயா் அதிகாரியான ஆய்வாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளாா். இது குறித்து அவா் புகாா் அளித்ததால், மனுதாரரை பழிவாங்கும் நோக்கோடு, பணியிடமாற்றம் செய்துள்ளனா். இது விசாகா குழு உத்தரவுக்கு எதிரானது. எனவே, மனுதாரரின் பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் பெண் உதவி ஆய்வாளரை காரணமின்றி பணியிட மாறுதல் செய்துள்ளனா். எனவே, அவரது பணியிட மாறுதல் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
அவரது பணியிட மாற்றத்துக்கான காரணம் குறித்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் தலைவா், புதுதில்லி தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் கமாண்டா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.