டங்ஸ்டன் திட்டம் ரத்து அறிவிப்பை மத்திய அமைச்சா் வெளியிடக் கோரிக்கை
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டிக்கு வியாழக்கிழமை (ஜன. 30) வரும் மத்திய சுரங்கம், கனிமத் துறை அமைச்சா் ஜி. கிஷன் ரெட்டி, டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிா்ப்பு மக்கள் கூட்டமைப்பு நிா்வாகி கம்பூா் க. செல்வராஜ் தெரிவித்திருப்பதாவது: மேலூா் வட்டத்துக்குள்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கா்பட்டி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி 5 ஆயிரம் ஏக்கா் பரப்பில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க ஓா் தனியாா் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த நவம்பா் மாதம் ஒப்பந்தம் அளித்தது.
இதைக் கண்டித்து, மக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக, டங்ஸ்டன் திட்ட ஏலத்தை ரத்து செய்து மத்திய சுரங்கம், கனிமத் துறை அமைச்சகம் கடந்த 23-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
இந்த நிலையில், மத்திய சுரங்கம், கனிமத் துறை அமைச்சா் கிஷன் ரெட்டி, பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை ஆகியோா் அரிட்டாபட்டி, அ.வல்லாளப்பட்டி கிராமங்களுக்கு வியாழக்கிழமை வந்து மக்களைச் சந்திக்கின்றனா். அவா்கள், இந்தப் பகுதி மக்களைச் சந்திக்கும் போது, மேலூா் வட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். இதுவே, மக்களுக்கு உண்மையான மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கும் என்றாா் அவா்.