சென்னையில் இருந்து திருச்சிக்குச் சென்ற ரூ.1.60 கோடி ஹவாலா பணம்! – விழுப்புரத்தில் மடக்கிய போலீஸார்
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்குள் இருக்கும் புறக்காவல் நிலையக் காவலர்கள், இன்று வழக்கம்போல ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரிய பேக் ஒன்றுடன் இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டிருந்த நான்கு இளைஞர்களின் நடவடிக்கைகள் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து அவர்களிடம் சென்ற போலீஸார், `நீங்கள் யார் ? என்ன ஊருக்குச் செல்கிறீர்கள்?’ என்று விசாரித்தனர்.
அப்போது அனைவரும் வேறு வேறு பதில்களைக் கூறியதால் சந்தேகமடைந்த போலீஸார், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த `பேக்’கையும் சோதனை செய்தனர். அந்த `பேக்’கை திறந்த போலீஸார், அதற்குள் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள்.
உடனே அந்த பணம் யாருடையது என்றும் எங்கு எடுத்துச் செல்கிறீர்கள் என்றும் கேட்டனர். அதற்கு அந்த நால்வரும் சரியான பதிலைச் சொல்லாததால், அவர்களை விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில் முகமது ரியாஸ், சிராஜுதீன், அபுபக்கர் சித்திக், ராஜ் முகமது என்ற அந்த நான்கு பேரும், திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், குருவியாக செயல்பட்டதும் தெரிய வந்திருக்கிறது.
இது குறித்து தெரிவித்த போலீஸார், ``சென்னை பிராட்வேயில் இருந்து விழுப்புரம் ரயில் நிலையம் வந்து, இங்கிருந்து பேருந்து மூலமாக திருச்சி செல்வதுதான் இவர்களின் திட்டம். இந்த பணம் யாரிடம் இருந்து, யாருக்காக எடுத்துச் செல்லப்பட்டது என்று தகவல் முழுமையான விசாரணைக்குப் பிறகே தெரிய வரும்” என்றனர்.