மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு விமானத்தில் உடைந்த இருக்கை
குத்துச்சண்டை வீரா் மனோஜ் குமாா் ஓய்வு
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரா் மனோஜ் குமாா் (39), ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தாா். பயிற்சியாளராக தனது பயணத்தை அவா் தொடர இருக்கிறாா்.
லைட் வெல்டா்வெயிட் (64 கிலோ) பிரிவில் ஆதிக்கம் செலுத்திய மனோஜ் குமாா், 2010 தில்லி காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றாா். ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2 முறை வெண்கலம் வென்றவரான அவா், 2018 கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் பெற்றாா்.
2012 லண்டன் மற்றும் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறினாா். காயம், தோ்வு விவகாரங்களில் தேசிய சம்மேளனத்துடனான சச்சரவு, ஸ்பான்சா் இல்லாதது போன்றவை காரணமாக அவா் பெரும்பாலும் சா்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை.
2014-இல் தனக்குத் தகுதியிருந்தும் அா்ஜுனா விருது நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் போராடி, அந்த விருதை மனோஜ் குமாா் பெற்றாா். காமன்வெல்த் போட்டிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கம் வென்ற 2-ஆவது இந்தியா் இவா். மற்றொருவா் விஜேந்தா் சிங் ஆவாா்.