`டிகிரி சர்டிஃபிகேட் ரூ.10,000…’ - கட்டுக்கட்டாக போலிச் சான்றிதழ்கள்... அண்ணாமலை பல்கலை., சர்ச்சை!
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இயங்கி வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் நிர்வாகச் சீர்கேடுகளாலும், முறைகேடுகளாலும் முடங்கும் நிலைக்குச் சென்றது. அதனால் அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கொண்டு, அந்த பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அரசு ஏற்பதாக அறிவித்தது. ஆனால் இப்போது முன்பைவிட அதிக முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சுமத்தி வருகின்றனர் பெற்றோர்களும், கல்வியாளர்களும்.
இந்த நிலையில்தான் தற்போது போலிச் சான்றிதழ்கள் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது பல்கலைக்கழகம். வடலூர் போலீஸார் நேற்று முன் தினம் மாலை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது வடலூர் - கும்பகோணம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி விசாரித்திருக்கின்றனர். அந்த நபரிடம் இருந்த தடுமாற்றம் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அவர் வைத்திருந்த பையை வாங்கி ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பையில் கட்டுக் கட்டான அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் இருந்ததால், போலீஸார் அது குறித்து கேட்டிருக்கின்றனர். அதற்கு அந்த நபர் சரியாக பதில் சொல்லாததால், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்திருக்கின்றனர். அப்போதும் அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறியதால், சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தேர்வு அதிகாரிகளை தொடர்பு கொண்டனர் போலீஸார்.
அப்போதுதான் அவை அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்ட சான்றிதழ்கள் என்பதும், பல்கலைக்கழகத்துக்கும் அந்த நபருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் உதயகுமார், அந்த நபரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``தற்போது பிடிபட்டிருக்கும் நபரின் பெயர் இளம்வழுதி. புவனகிரி பகுதியைச் சேர்ந்த இந்த நபரின் தந்தை ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளர். நான்கு வருடங்களுக்கு முன்பு வடலூரில் வேலை வாய்ப்பு கன்ஸ்டல்டன்சியை நடத்தி வந்த விக்னேஷ் என்பவருடன், இளம்வழுதிக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. கன்ஸ்டல்டன்சி என்ற பெயரில் அண்ணாமலை பல்கலைக்கழத்தின் போலிச் சான்றிதழ்களை விற்பனை செய்து கொண்டிருந்த விக்னேஷ், அந்த வேலைக்கு இளம்வழுதியை பார்ட்னராக சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
விக்னேஷ்தான் பார்ட்டிகளிடம் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார். அதேபோல பல்கலைக்கழகத்தின் ஒரு செக்யூரிட்டி மூலம்தான், இவர்கள் போலிச் சான்றிதழ்களை பெற்றிருக்கிறார்கள். கைமாறும் ஒவ்வொரு சான்றிதழுக்கும் இளம்வழுதிக்கு ரூ.4,000-ம், அந்த செக்யூரிட்டிக்கு ரூ.6,000/- என நிர்ணயித்து, கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான போலிச் சான்றிதழ்களை விற்றிருக்கிறார்கள்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் போலிச் சான்றிதழ்களை விற்றிருக்கிறார்கள். செக்யூரிட்டியிடம் இருந்து இளம்வழுதிக்கும், அதன் பிறகு விக்னேஷுக்கும் சான்றிதழ்கள் கைமாறும். அதன்பிறகு விக்னேஷ் அந்தப் போலிச் சான்றிதழ்களை ரூ.10,000 முதல் ரூ.1,00,000/- லட்சம் வரை விற்றிருக்கிறார். தன்னுடைய பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை விற்றதால், கடந்த டிசம்பர் 15-ம் தேதி விக்னேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
அதேபோல பரந்தாமன் என்ற அந்த செக்யூரிட்டியும் மூன்று மாதங்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்கலைக்கழக தரப்பிலிருந்து அந்த செக்யூரிட்டிக்கு போலிச் சான்றிதழ்கள் தயாரித்துக் கொடுத்தது யார் என்பதும், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதும் விசாரணை முடிவில்தான் தெரியவரும்” என்றனர்.