கும்பமேளா நெரிசல் எதிரொலி: கூட்ட மேலாண்மை நடவடிக்கைகளில் உ.பி. அரசு தீவிரம்
`யாரும் அக்கறை காட்டவில்லை'- சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலைக்கு முயன்ற தம்பதி - மயிலாடுதுறை சோகம்
மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (69). இவரது மனைவி செந்தாமரை (59). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஹோமியோபதி மருத்துவராக இருந்த இளங்கோவன் திராவிடர் கழகத்தில் பொறுப்பில் இருந்தவர். மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகள்கள் கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். வீட்டின் கீழ்பகுதியில் மகன் தன் மனைவியுடன் தனியாகவும், மாடியில் இளங்கோவனும், செந்தாமரையும் வசித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இளங்கோவனும், செந்தாமரையும் உடல் நிலை பாதிக்கப்பட்டு சில வருடங்களாக சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். மகனும், மருமகளும் அவர்களை கவனித்துக் கொள்ளவில்லை என்கிறார்கள். உடல் நிலை பாதிப்புடன் தங்களை கவனிக்க ஆள் இல்லாத விரக்தியில் இருவரும் இருந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை இளங்கோவன் வீட்டிலிருந்து பெரிய சத்தம் கேட்டுள்ளது. இதில் ஒரு பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. மாடி பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதைப்பார்த்து பதறிய அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். உடனே வந்த தீயணைப்பு வீரர்களுடன் அருகில் இருந்தவர்களும் தீயை அணைத்து விட்டு உள்ளே சென்றுள்ளனர். உடல் எரிந்த நிலையில் செந்தாமரை இறந்து கிடந்துள்ளார். அவர் மடியில் தலைவைத்தபடி தீக்காயங்களுடன் இளங்கோவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை தூக்கச் சென்றவர்களிடம், `என் மனைவி செத்துப் போயிட்டாள், நானும் செத்துப் போறேன், என்னை பொழைக்க வைக்காதீங்க... இங்கேயே போட்டுடுங்க' என்று கதறியிருக்கிறார்.
உடனே அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 90 சதவீதம் உடல் தீயில் எரிந்த நிலையில் அபாயக் கட்டத்தில் இருக்கும் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் எஸ்.பி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்தச் சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் எற்படுத்தியுள்ளது. ``எங்களை யாரும் கவனிக்கவில்லை. நோயுடன் அவதிப்பட்டதை விட யாரும் அக்கறை காட்டாதது, எங்களுக்கு துயரத்தையும், வலியையும் தந்தது. அதனால் தற்கொலை செய்து கொள்வதற்காக சிலிண்டரை வெடிக்க வைத்தோம்" என இளங்கோவன் வாக்குமூலம் அளித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.