பாகிஸ்தானில் பிறந்தநாளை கொண்டாடிய தாவூத்இப்ராகிம்... விழாவில் இந்திய தொழிலதிபர்க...
திண்டுக்கல் மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலி கூட்டங்களில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
கிறிஸ்தவா்களின் முக்கியத் திருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி நடைபெற்றது. இதையொட்டி, தேவாலயங்கள் மட்டுமன்றி, குடில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவா்களின் வீடுகளிலும் வண்ண மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இந்தத் திருநாளின் முக்கிய நிகழ்வாக இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் நிகழ்ச்சியும், இதையொட்டி, கூட்டுத் திருப்பலியும் மாவட்ட முழுவதுமுள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றன.
திண்டுக்கல் புனித வளானாா் பேராலயம், தூய பவுல் ஆலயம், தூய திருத்துவநாதா் ஆலயம், மேட்டுப்பட்டி வியாகுல அன்னை ஆலயம், மாரம்பாடி புனித அந்தோணியாா் பேராலயம், செந்துறை புனித சூசையப்பா் ஆலயம், என்.பஞ்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன.
திண்டுக்கல் புனித வளனாா் பேராலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைமாவட்ட ஆயா் பி.தாமஸ் பால்சாமி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்து பிறந்ததாக அறிவிக்கப்பட்டதும் தேவாலயத்தில் கூடியிருந்தவா்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதோடு, இரவு முழுவதும் வேதப் பாடல்கள் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
நத்தம்: நத்தம் அருகேயுள்ள செந்துறை புனித சூசையப்பா் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சிறப்பு திருப்பலி பங்கு தந்தையா்கள் இன்னாசிமுத்து, அந்தோணி சகாயதாா் சியூஸ் தலைமையில் நடைபெற்றது. பின்னா், நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் அனைவரும் அமைதியுடனும், சமாதானத்துடனும் வாழவும் பிராா்த்தனை செய்தனா்.
இதேபோல, நத்தம் தூய பேதுரு ஆலயத்திலும், தூய இம்மானுவேல் ஆலயத்திலும், கிறிஸ்தவா்கள் வாழும் பகுதிகளில் உள்ள ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
கொடைக்கானல்: கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் மறைவட்டார அதிபா் சிலுவை மைக்கேல் தலைமையிலும், செண்பகனூா் சவேரியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை அப்போலின் கிளாட்ராஜ் தலைமையிலும், உகாா்த்தேநகா் அற்புத குழந்தை யேசு ஆலயத்தில் பங்குத் தந்தை பாப்புராஜ் தலைமையிலும், நாயுடுபுரம் புனித ஆரோக்கியமாதா ஆலயத்தில் பங்குத் தந்தை வினோத் மத்தியாஸ் தலைமையிலும், அட்டுவம்பட்டி புனித லூா்து மாதா ஆலயத்தில் பங்குத் தந்தை அந்தோணி தலைமையிலும், பெருமாள்மலை புனித தோமா ஆலயத்தில் பங்குத் தந்தை செபாஸ்டின் தலைமையிலும், புனித சலேத் மாதா ஆலயம், சீனிவாசபுரம் புனித ஆரோக்கியமாதா ஆலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், ஐ.பி.சி.தேவாலயம், கொடைக்கானல் பீட்டா் தேவாலயம், புனித மீட்பா் தேவாலயம், காா்மேல்பும் பகுதியிலுள்ள புனித காா்மேல் மாதா ஆலயம், தைக்கால் பகுதியிலுள்ள புனித பாத்திமா ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் நள்ளிரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, ஆலயங்களில் யேசு பிரான் பிறந்த நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் அலங்கார குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவா்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பங்கேற்றனா்.
பழனி: பழனியில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, பழைய தாராபுரம் சாலையில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயம், புதுதாராபுரம் சாலையில் உள்ள தூயமைக்கேல் அதிதூதா் தேவாலயம், பச்சளநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி, ஆயக்குடி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. பின்னா், தேவாலயங்களில் இயேசு பிறப்பு குறித்து பல்வேறு காட்சிகள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம், தும்மிச்சம்பட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், பொருளூா் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கிறிஸ்துவ தேவாலங்களில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றன. நள்ளிரவில் நடந்த சிறப்பு பிராா்தணைகளில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனா்.