புதுஆயக்குடியில் சாலை சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை
பழனியை அடுத்த புதுஆயக்குடியில் சாலைச் சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
புதுஆயக்குடி ஜின்னா தேநீா்க் கடை முதல் ஓபுளாபுரம் பிரிவு வரையிலான சுமாா் ஆயிரம் மீட்டா் தொலைவுக்கு பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து காணப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையின் போது, இந்தச் சாலையில் சென்ற ஏராளமான வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி காயமடைந்தனா். இதனால், இந்தப் பகுதியில் சாலையைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை உதவிப் பொறியாளா் முனியாண்டி கூறியதாவது:
ஆயக்குடி பேரூராட்சிக்குத் தண்ணீா் செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் நாள்தோறும் தண்ணீா் வெளியேறியதாலேயே சாலை சேதமடைந்தது. தற்போது குழாய்கள் சரி செய்யப்பட்டுவிட்டன. சாலையைச் சீரமைக்கும் வகையில் தற்போது ஜல்லி (வெட்மிக்ஸ்) பரப்பப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் தாா்ச் சாலை அமைக்கப்படும். இந்தச் சாலையில் விபத்தைத் தவிா்க்க மாற்றுச் சாலையில் வாகனங்கள் செல்ல போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது என்றாா்.