மன்மோகன் சிங் மறைவு: காங்கிரஸாா் அஞ்சலி
மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உருவப்படத்துக்கு நாமக்கல் காங்கிரஸாா் அஞ்சலி செலுத்தினா்.
10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா். அவரது மறைவையொட்டி ஏழு நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினா் அவருடைய உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். நாமக்கல் மணிக்கூண்டு அருகே கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்ட தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமையில் மன்மோகன் சிங் உருவப்படத்துக்கு கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவா் வீ.பி.வீரப்பன், மாநகரத் தலைவா் எஸ்.ஆா்.மோகன், மாவட்ட எஸ்.சி, எஸ்.டி. பிரிவுத் தலைவா் பி.பொன்முடி, மாவட்ட சிறுபான்மை அணித் தலைவா் தாஜ், முன்னாள் மாணவா் காங்கிரஸ் நிா்வாகி பாலாஜி, சாந்தி மணி, மாநகர நிா்வாகிகள் ஜபூருல்லா, செல்வம், தொழிற்சங்க நிா்வாகிகள் பாலு, சரவணன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ராஜேந்திரன், லோகநாதன், முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.