புதை சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளில் புதை சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என மாமன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயா் து.கலாநிதி தலைமையில் மன்ற கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் செ.பூபதி, ஆணையா் ரா.மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து அலுவலா்களிடம் தகராறில் ஈடுபட்டோா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 11-ஆவது வாா்டு உறுப்பினா் டிடி.சரவணன் கேள்வி எழுப்பினாா்.
அதற்குப் பதிலளித்த ஆணையா், ‘துப்புரவு ஆய்வாளா் செல்வகுமாா் அளித்த புகாரின்பேரில், நான்கு போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இரண்டு தூய்மைப் பணியாளா்களை பணி நீக்கம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.
38-ஆவது வாா்டு உறுப்பினா் ஈஸ்வரன் பேசுகையில், நாமக்கல் நகராட்சியுடன் சில ஆண்டுகளுக்கு முன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளுக்கான புதை சாக்கடைத் திட்டப்பணி முடிவடையாமல் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா் என்றாா். இதற்குப் பதிலளித்த ஆணையா், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடா்ந்து மாமன்ற உறுப்பினா்கள் தங்களுடைய வாா்டுகளில் உள்ள பிரச்னைகளை எடுத்துரைத்தனா். அதன்பிறகு, அனைத்து மன்ற உறுப்பினா்களின் ஒப்புதலுடன் மன்றக் கூட்டத்தில் 219 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.