'எல்லா தப்பையும் நான் தான் பண்ணேன்' - கொதித்த ராமதாஸ் உடைந்த PMK? Anbumani|Imper...
திமுக வேட்பாளர்கள் பி. வில்சன், சல்மா, சிவலிங்கம் யார்?
சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை கட்சித் தலைமை இன்று அறிவித்துள்ளது. மாநிலங்களவைத் தேர்தல் தேதி வெளியான ஒரு சில நாள்களிலேயே வேட்பாளர்களை அறிவித்து திமுக அதிரடி காட்டியிருக்கிறது.
மேலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் பெயர்களை கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வழக்குரைஞர் பி. வில்சன், கவிஞர் சல்மா, சேலம் கிழக்கு மாவட்டச் செயலராக உள்ள எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புஷ்பநாதன் வில்சன்
மூத்த வழக்குரைஞர் புஷ்பநாதன் வில்சன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக கடந்த 2012 ஆகஸ்ட் முதல்வ 2014 மே வரை பதவி வகித்தவர். தமிழகத்தின் அரசு கூடுதல் வழக்குரைஞராகவும் 2008 ஆகஸ்ட் முதல் 2011 மே வரை பணியாற்றியவர்.
கவிஞர் சல்மா
கவிஞர் சல்மாவின் புனைப்பெயர் ராஜாத்தி. பிறகு அவர் ராஜாத்தி சல்மா எனவும் அழைக்கப்பட்டார். தமிழ்நாட்டின் சமகால கவிஞர்களில் மிக முக்கியமானவராகவும், முன்னோடி பாலின ஆர்வலராகவும் அறியப்படுவர். பல காலமாக திமுக உறுப்பினராக இருப்பவர்.
எஸ்ஆர் சிவலிங்கம்
தமிழக சட்டப்பேரவைக்கு 1989 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் பனமரத்துப்பட்டி தொகுதியிலிருந்து திமுக சார்பில் போட்டியிட்டுத் தேர்வானவர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் (பாமக), என்.சந்திரசேகரன் (அதிமுக), எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, பி.வில்சன், வைகோ (திமுக சாா்பில் தோ்வு செய்யப்பட்டவா்கள்) ஆகிய ஆறு பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதை முன்னிட்டே ஆறு மாநிலங்களவை இடங்களை நிரப்புவதற்கான தோ்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான நிலையில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த முறை மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது மறுக்கப்பட்டுள்ளது.விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தேமுதிக சார்பில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.