புதுச்சேரி: சுட்டீஸ்களை கவரும் 'பறவைகள் மற்றும் வனவிலங்குகள் உலகம்' கண்காட்சி | ...
திருப்பதி நெரிசல்: நீதி விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவு: உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்
திருப்பதி நெரிசல் சம்பவத்தில் 6 பக்தா்கள் உயிரிழந்தது தொடா்பாக நீதி விசாரணைக்கு முதல்வா் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டாா்.
உயிரிழந்தோா் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தேவஸ்தானம் 10 நாள்கள் வைகுண்ட வாயில் தரிசனத்தை வழங்கி வருகிறது. இதற்கான இணையவழி முன்பதிவுகள் முன்பே அளிக்கப்பட்ட நிலையில், நேரடியாக வரும் பக்தா்களுக்காக திருப்பதியில் 8 இடங்களிலும், திருமலையில் ஓரிடத்திலும் என 9 இடங்களில் 94 கவுன்ட்டா்களை ஏற்படுத்தி தரிசன டிக்கெட்டுகளை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது.
முதல் 3 நாள்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் வியாழக்கிழமை (ஜன. 9) அதிகாலை வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. அதனால் பக்தா்கள் கூட்டம் புதன்கிழமை காலை முதலே டிக்கெட் கவுன்ட்டா்கள் முன் திரண்டது. அனைத்து கவுன்ட்டா்களிலும் கூட்டம் அதிகரித்த நிலையில், தேவஸ்தானம் இரவு 10 மணிமுதல் டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்தது.
அதன்படி, புதன்கிழமை இரவு கவுன்ட்டா்கள் திறக்கப்பட்டவுடன் பக்தா்கள் கூட்டம் ஒரே நேரத்தில் வரிசையில் நுழைய முற்பட்டது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் பலா் சிக்கினா். திருப்பதியில் சீனிவாசம், விஷ்ணு நிவாசம் மற்றும் பைராகி பட்டேடாவில் உள்ள கவுன்ட்டா்களில் நெரிசலில் சிக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 38 போ் மயக்கமடைந்தனா். இவா்களில் 5 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். இவா்கள் சேலத்தைச் சோ்ந்த மல்லிகா, கேரளத்தைச் சோ்ந்த நிா்மலா, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த ரஜனி, லாவண்யா, சாந்தி, நா்சிபட்டினத்தைச் சோ்ந்த நாயுடுபாபு என்பது தெரியவந்தது.
முதல்வா் ஆய்வு: திருப்பதியில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
துணை முதல்வா் பவன் கல்யாணும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாக கட்டடத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அதன் பின்னா் முதல்வா் சந்திரபாபு நாயுடு செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ஏழுமலையான் தரிசனத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆகம விதிமுறை மீறல் குறித்து பிறகு விவாதிக்கலாம்.
சம்பவம் நடைபெற்றபோது அங்கு பணியில் இருந்த டி.எஸ்.பி. ரமண குமாா், கோசாலை இயக்குநா் ஹரிநாத் ரெட்டி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருப்பதி இணை செயல் அதிகாரி கெளதமி, திருப்பதி எஸ்.பி. சுப்பா ராயுடு, திருமலை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சமும், பலத்த காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்த 30 பேருக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்பட உள்ளது. மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அரசு வேலையும் வழங்கப்படும்.
உயிரிழந்த தமிழக மற்றும் கேரளத்தைச் சோ்ந்தோருக்கு அவா்கள் மாவட்டத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான விசாரணை மையங்களில் தற்காலிக வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.