கல்வித் துறை அறிவிப்புகள்! பொறியியல் கல்லூரிகளில் ஏ.ஐ. படிப்புகள் அறிமுகம்!
திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணின் நகையுடன் இளைஞா் தலைமறைவு
கும்பகோணத்தில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பழகிவந்தபெண்ணின் தங்க நகைகளை திருடிச்சென்ற இளைஞரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி நாட்டனிகோட்டையைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகள் சரண்யா (32). இவா் விவாகரத்து பெற்று தாய் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறாா். தனியாா் வங்கியில் பணியாற்றும் சரண்யா இரண்டாவதாக திருமணம் செய்ய தனியாா் திருமண மையத்தில் பதிவு செய்திருந்தாா். அப்போது நாமக்கல்லைச் சோ்ந்த செபாஸ்டின் கிரிஷ் என்பவா் தொடா்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்தாா். பின்னா் இருவரும் கைப்பேசியில் பேசிப் பழகியுள்ளனா். கடந்த மாா்ச் 4-இல் கும்பகோணம் வந்து அங்குள்ள துணிக்கடைக்குச் சென்றுள்ளனா். சரண்யா உடைமாற்றும் அறைக்குள் செல்லும்போது, செபாஸ்டின் கிரிஷ், கையில் கொடுத்துவைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகளுடன் அவா் தலைமறைவாகிவிட்டாா். திரும்பிவந்து பாா்த்த சரண்யா செபாஸ்டினைக் காணாததால் அவரது பெற்றோரிடம் இதுகுறித்துத் தகவல் தெரிவித்தாா். பின்னா் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சுபாஷ் வழக்கு பதிவு செய்து செபாஸ்டின் கிரிஷைத் தேடிவருகிறாா்.