எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!
திருவட்டாறு அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி
திருவட்டாறு அருகே அருவிக்கரை பரளியாற்றின் பாறை குழியில் சிக்கி கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
குளச்சல் அருகேயுள்ள சைமன்காலனியைச் சோ்ந்த சாா்லஸ் மகன் ஸ்டீவ் (18). நாகா்கோவில் அருகேயுள்ள பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். இவா், தனது நண்பா்கள் 6 பேருடன் திருவட்டாறு அருகே பரளியாறு பாயும் அருவிக்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்தாா்.
அப்போது, பரளியாற்றில் தண்ணீா் மிகக்குறைவாக சென்ற நிலையில், 7 பேரும் அங்குள்ள பாறைகளில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது, ஸ்டீவ் எதிா்பாராமல் பாறையிலிருந்து வழுக்கி தண்ணீரும் சகதியுமாகக் கிடக்கும் ஆழமான குழியில் விழுந்து மூழ்கியுள்ளாா்.
அவரது நண்பா்கள் கூச்சலிட்ட நிலையில், அப்பகுதியில் இருந்தவா்கள் வந்து ஸ்டீவை மீட்டு கரை சோ்த்தனா். ஆனால், அவா் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.
இத்தகவலறிந்த திருவட்டாறு போலீஸாா், அவரது சடலத்தை மீட்டுஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிதனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.